"மீள்குடியேற்றத்திலுள்ள சமூக தனித்துவத்தை உணர்ந்தவர்" - சல்மான் எம்.பியின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மானின் மறைவால் முஸ்லிம் சமூகம் நல்லதொரு புத்திஜீவியை இழந்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  கவலை தெரிவித்துள்ளார்.


இதுபற்றி அவரது அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


“புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவராக இருந்த மர்ஹும் சல்மான், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தில் கணிசமான பங்களிப்பை நல்கிய பெருந்தகை. குறிப்பாக, வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேறலில் ஒரு சமூகத்துக்குள்ள தனித்துவ அடையாளத்தைப் புரிந்து செயலாற்றியவரும் இவர்தான். 


சட்டப் புலமையில் அவரிடமிருந்த நுணுக்கம் பெருந்தலைவர் அஷ்ரஃபுக்கும் பல தடவைகள் உதவியிருந்தன. பாராளுமன்ற உறுப்பினராயிருந்த அவர், வாக்குறுதியைக் காப்பாற்ற எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் இன்னும் பிரகாசிக்கின்றன.


"நிச்சயமாக, நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை வந்தடைந்தே தீரும்" என்கிறது இறைமறை. எனவே, இறைவனின் நாட்டத்தில் நம்பிக்கை வைத்து அன்னாருக்காகப் பிரார்த்திப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய குடும்பத்தினருக்கு பொறுமையையும் மனதைரியத்தையும் வழங்குவானாக..!ஆமீன்..!”