கிழக்கு உட்பட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு வேண்டுகோள்
நான்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.


குறிப்பிட்ட மாகாணங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்தே அரசாங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.


கிழக்கு, வடமேல், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர்களையே அரசாங்கம் பதவியிலிருந்து விலகுமாறு கோரியுள்ளது.


சீனாவின் யுகான் மாகாணத்துடன் இணைந்து முன்னெடுக்கவிருந்த திட்டத்தை நிறுத்துமாறு தனக்கு ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதயகம்பத் சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.


தன்னை பதவி விலகுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டமைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


யுகான் மாகாண ஆளுநருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் அடுத்த வாரம் சந்திப்பொன்று இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸ்ஸம்மில் தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தான் பதவி விலகத் தயார் என குறிப்பிட்டுள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.


மாகாண ஆளுநர்கள் தங்களுடன் இணைந்து செயற்பட தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பதவியிலிருந்து விலகுமாறு அவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.