வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - ரஞ்சித் சியம்பலாப்பிட்டி



(எம்.மனோசித்ரா)


நாட்டில் எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் பொருளாதார நிலையை பலப்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய சமூக நலச்சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.


குறித்த சட்ட மூலம் தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை சமூக நலச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சமூகத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.


அத்தோடு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமூக நலத்திட்டங்களில் உள்வாங்கப்படுவதற்கு பொறுத்தமானவர்களும் இதன் ஊடாக தெரிவு செய்யப்படுவர்.


அதே போன்று எவரேனுமொருவர் இதனைப் பெற தகுதியுடையவராக இருந்தும், அவருக்கு அவை கிடைக்கப் பெறாவிட்டால் மேன்முறையீடு செய்து தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பும் இதில் காணப்படுகிறது.


1945ஆம் ஆண்டு முதல் நாட்டில் சமூக நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறிருந்தும் தற்போது நாட்டிலுள்ள மொத்த குடும்பங்களில் 50 சதவீதமானோர் இவற்றை எதிர்பார்த்துள்ளனர்.


எனவே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமூக நலத்திட்டங்களை குறிப்பிட்டவொரு காலப்பகுதியில் மாத்திரம் நடைமுறைப்படுத்தி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே இதன் இலக்காகும். மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 15000 ரூபாவும், அதற்கு அடுத்த கட்டத்திலுள்ள குடும்பங்களுக்கு 8500 ரூபாவும் வழங்கப்படும்.


இந்த நலன்புரி தொகையைப் பெறும் குடும்பங்களை 3 ஆண்டுகளுக்குள் அரசாங்கத்திடமிருந்து உதவிகளை எதிர்பார்க்காத குடும்பங்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார்.