பரீட்சை தொடர்பில் சிக்கல் இருப்பின் அழைக்க அவசர தொ.இலக்கங்கள்


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2022 (2023) பரீட்சை தொடர்பான நுழைவுச் சீட்டுகளை பரீட்சார்த்திகளிடம் விரைவில் கையளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் விஜேசுந்தர அனைத்து அதிபர்களிடமும் கேட்டுக் கொள்கிறார்.


எக்காரணம் கொண்டும் பரீட்சார்த்திகளிடம் பரீட்சைக்கான சீட்டுக்களை அதிபர்கள் தடுத்து வைக்கக் கூடாது எனவும், ஏதேனும் காரணத்தினால் நுழைவுச் சீட்டுகளை தடுத்து வைத்து பரீட்சாத்திக்கு பரீட்சைக்குத் தோற்ற முடியாதிருந்தால் அதற்கு அதிபரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை 3,568 மையங்களில் நடத்த பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


பரீட்சை அட்டவணையை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.


பரீட்சை தொடர்பில் ஏதேனும் சிக்கல் இருப்பின் 1911 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0112784208, 0112784537, 0112785922, 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிந்து கொள்ளலாம்.