விமான நிலையத்தின் VIP, VVIP பகுதிகள் கடுமையாக கண்வைப்பு.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர்களின் பகுதிகள் (VIP மற்றும் VVIP) ஊடாக வெளிவரும் அனைத்து பிரமுகர்கள் மற்றும் அவர்களின் பொதிகளை கடுமையான சோதனைக்கு உட்படுத்த விமான நிலைய சுங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


அதற்கமைய, பிரமுகர்களின் பிரிவு வழியாக விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வரும் அனைத்து அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் இனி விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.


இந்த சோதனைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முக்கிய பிரமுகர் வழியாக வந்த உயரதிகாரி ஒருவர் சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த மின் உபகரணங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் 8 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளை எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த பிரமுகர்களின் பகுதி வழியாக வரும் பிரமுகர்களை சோதனையிட சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


இந்த உயரடுக்கு முனையத்தின் ஊடாக நீண்ட காலமாக பிரமுகர்கள் பெருமளவிலான தடை செய்யப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம் என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இந்த வழி மூலம் தங்கம், இரத்தினங்கள், பணம் மற்றும் போதைப்பொருட்கள் கூட நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அவர்கள் நம்புவதாக அவர்கள் கூறுகிறார்கள்.


இனிமேல் இந்த பகுதிகளில் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பிரமுகர்கள் உரிய முறையில் சோதனை செய்ய சுங்கத் தலைமையகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.