
இலங்கை மக்களில் சுமார் 75 இலட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேலைத்திட்டம்(WFP) மற்றும் உணவு பாதுகாப்பு, விவசாய அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ள உணவு பாதுகாப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை (CFSAM) இலங்கையின் உணவு பாதுகாப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
2023 மே 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட உணவு பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பிலான (CFSAM) அறிக்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே உலக உணவு வேலைத்திட்ட உதவிச் செயலகத்தின் (PSWFPC) பணிப்பாளர் நாயகமுமான கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை மக்கள் பார்வைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு, விவசாய அமைப்பின் (FAO) உத்தியோகபூர் இணைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி இணையத் தளத்தில் உண்மைத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் இயலுமை காணப்படுகின்ற போதும் சில உள்நாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் காணப்படும் தகவல்களுக்கு புறம்பான விடயங்கள் காணப்படுகின்றமை கவலைக்குரியது எனவும் தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையில் இலங்கை சனத்தொகையில் 17% சதவீதமானவர்கள் அதாவது 39 இலட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மை பிரச்சினைக்கு ஆளாகியுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் கடந்த வருடத்தின் ஜூன்/ஜூலை மாதங்களுடன் ஒப்பிடும் போது அந்த நிலைமை 40% சதவீத குறைவடைந்திருப்பதாகவும் உணவு பாதுகாப்பின்மை முகம்கொடுத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் 66,000 இல் இருந்து 10,000 வரையில் குறைவடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேற்படி விடயத்தை உணவு நுகர்வின் அதிகரிப்பாகவும் கருத முடியும் என்பதோடு, அறுவடைக் காலத்தில் விவசாய சமூகத்தினரின் குறைந்த உணவுச் செலவும் அதிக வருமானமும் இதற்கு காரணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உணவுப் பாதுகாப்பின்மையின் அளவு மற்றும் தீவிரம் பற்றிய துல்லியமான, விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கத் தேவையான தகவல்களை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்குவதே உணவு பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு ஆய்வின் (CFSAM) நோக்கமாகும்.
CFSAM ஆனது உணவுப் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டுச் செயற்பாட்டின் ஊடாக , முழுப் பொருளாதாரச் சூழலையும் கருத்திற் கொண்டு, பேரண்ட மற்றும் நுண் மட்டம் இரண்டிலும் உணவுப் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்கிறது. ஒட்டுமொத்த பொருளாதார சூழல், விவசாய உற்பத்தி, சந்தை நிலைமைகள் மற்றும் பிரதான உணவுகள், முக்கிய தானியங்களின் விநியோக-தேவை செயன்முறை ஆகியவற்றை இது உள்ளடக்கியது. விவசாயப் பொருட்கள், சந்தை நிலைமைகள், பிரதான உணவுகளின் கேள்வி மற்றும் விநியோக நிலைமைகள் உள்ளடங்கலாக தேசிய தானியங்கள்/ பிரதான உணவு உற்பத்தி இருப்பு பட்டியல் (NFBS) எதிர்வரும் வருடத்தில் பிரதான உணவு பொருட்களின் இறக்குமதிக்கு அவசியமானதும் பூர்த்தி செய்யப்படாததுமான மதிப்பீடும் செயற்பாடுகளும் இதில் உள்வாங்கப்படுவதாக, கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.