இலங்கையில் மீண்டும் மலேரியா அச்சுறுத்தல் : சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை


நாட்டில் மீண்டும் மலேரியா நோய் பரவல் அச்சுறுத்தல் காணப்படுவதாக, சுகாதார அமைச்சு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 'அனோபிலிஸ் ஸ்டீபன்ஸி' (Anopheles Stephensi) வகை நுளம்புகளின் பாதிப்புக் காணப்படுவதால், மீண்டும் மலேரியா அச்சுறுத்தல் தொடர்பாக அந்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் 6 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் இந்த நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் கிழக்கில் அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை மற்றும் வடக்கில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலேயே மலேரியா அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


இலங்கையில் 2016ஆம் ஆண்டு மலேரியா நோயை பரப்பும் நுளம்புகள் தொடர்பாக கண்டறியப்பட்டன.


2016ஆம் ஆண்டு மன்னாரிலும் அதனையடுத்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் முதன் முதலில் மலேரியா நோயை பரப்பும் நுளம்புகள் காணப்பட்டதாக சுகாதாரப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.


லோரன்ஸ் செல்வநாயகம்