நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வெகு விரைவில் மீண்டு வருவதற்கான அறிகுறிகளை தெளிவாகக் காட்டுவதாகவும், மத்திய வங்கியும் தேவையான தலையீட்டை மேற்கொள்ளும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
பங்களாதேஷுடனான 200 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தை செப்டெம்பர் மாதத்தில் தீர்த்து வைப்போம் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் 0.2 வீதத்தால் சுருங்கக் கூடும் என்றும் இந்த வருடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனவும் ஆண்டின் முதல் பாதியில் ஏற்பட்டுள்ள சுருக்கம் காரணமாக, இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டுக்கான எதிர்மறையான
வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் இந்த வருடத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 24.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனவே கடந்த சில வாரங்களாக அ. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை குறைப்பதற்கு மத்திய வங்கி தலையிட்டதாகவும் ரூபாயின் ஏற்ற இறக்கத்தை குறைக்க இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். நாணயத்தை விரைவாக பலவீனப்படுத்துவது அல்லது வலுப்படுத்துவது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற அவர், இந்த ஆண்டு 1.67 பில்லியன் டொலர்களை உள்ளூர் சந்தையில் இருந்து மத்திய வங்கி வனவுசெய்துள்ளது என்றார்.