ஆதம் லெப்பை ஹசரத் அவர்களின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன் - ஹிஸ்புழ்ழாஹ் அனுதாபம்!

 


காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்டு பல்வேறு பட்ட மார்க்கப் பணிகளிலும் ஈடுபட்டு நாடு முழுவதிலும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்த ஒரு மார்க்க அறிஞர் ஆதம் லெப்பை ஹசரத் அவர்கள். அவரது மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மார்க்க விடயங்களை தெளிவுபடுத்துவதில் முதன்மையானவர்.


தஃவா பணிகளில் எல்லோருடனும் பண்பாகவும், அன்பாகவும் பழகக் கூடிய ஒருவர். ஜாமிஅதுல் பலாஹ்வில் கல்வி கற்று அங்கேயே உஸ்தாதாகவும்,தப்லீக் ஜமாஅத் மத்ரசாவில் அதிபராகவும் தப்லீக் ஜமாஅத் மத்ரசாவில் பல்வேறு பட்ட பணிகளிலும் இருந்து தேசிய ரீதியிலும் சமூகப் பணியாற்றியவர். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் அவர்களை கல்வி ரீதியாக வழி காட்டுவதற்காக பல்வேறுபட்ட பயிற்சி வகுப்புக்களை நடத்தியவர்.


காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனம், காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா, காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரி, காத்தான்குடி மர்க்கஸ் உட்பட பல்வேறு பட்ட சமூக நிறுவனங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அன்னாரின் மறுமை வாழ்வை அல்லாஹ் சுவர்க்கப் பூஞ்சோலையாக மாற்றுவானாக. அன்னாரின் குடும்பத்திற்கு மன அமைதியும் சமாதானமும் உண்டாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோமாக.