நாடறிந்த மூத்த ஆலிம் ஆதம் லெப்பை ஹஸரத் (அஷ்ஷைக் பி.எம்.ஹனீபா) அவர்களின் மறைவு நமது சமூகத்துக்கு பேரிழப்பாகுமென்றும் அவரின் மறைவு பெருங்கவலை தருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஆதம் லெப்பை ஹஸரத் அவர்களின் மறைவையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டு்ள்ளதாவது,
"காத்தான்குடியின் அரபுக் கல்லூரிகள் பலவற்றின் உஸ்தாதாகவும் பொறுப்பாளராகவும் சிறப்பாகக் கடமையாற்றிய அவர், மார்க்கக் கல்விக்காகவும் இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த பேரறிஞர்.
தனிப்பட்ட சொந்த வேலைகள், குடும்ப நலனுக்கு அப்பால் இஸ்லாத்தின் எழுச்சியை மதித்த அன்னார், மக்கள் உள்ளங்களில் மார்க்கக் கடமைகளை உணர்த்தி, ஆழமாகப் பதித்தவர். அவரிடம் மார்க்கக் கல்வியைக் கற்ற ஏராளமான மாணவர்கள் சிறந்த மார்க்க அறிஞர்களாகவும், உலமாக்களாகவும் திகழ்கின்றனர். இவ்வாறான மார்க்க அறிஞர் ஒருவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊரவர்களின் கவலையில் நானும் பங்குகொள்கின்றேன்.
அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்துவிட்ட இந்த இழப்பை பொறுமையோடு ஏற்றுக்கொண்டு, அன்னாரின் மறுமை பேறுகளுக்காகப் பிரார்த்திப்போம்"