இலங்கையின் முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு புனித மக்கா நோக்கி பயணம்

2023 ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக முல்தஸம் மற்றும் மர்யம் ஆகிய இரண்டு ஹஜ் முவர்கள் ஊடாக 64 பேர் கொண்ட முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு 2023.06.04ம் திகதி காலை 10.05க்கு புனித மக்கா நோக்கி பயணமாகினர். இவர்களை வழியனுப்பும் நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் குழு மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் 2023.06.04ம் திகதி காலை 07.30 மணியளவில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. சோமரத்ன விதானபதிரன, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கௌரவ காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, வீசா பகுதிக்கான பொறுப்பதிகாரி திரு. சாலிஹ் அப்துல்லாஹ் அல்ஃபராஜி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் பைசல் ஆப்தீன், இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் இப்றாகிம் அன்சார், இலங்கை விமானப் போக்குவரத்து அதிகார சபையின் உப பணிப்பாளர் கலாநிதி அஜித் மென்டிஸ், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் அலா அஹமட், ஹஜ் குழு உறுப்பினர்களான இபாஸ் நப்கான், ஹனீபா இஸ்ஹாக், இலங்கை ஹஜ் பயண முகவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரக அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இவ்வருடம் புனித ஹஜ் கடமைக்காக இலங்கையிலிருந்து 3500 யாத்திரிகர்கள் புனித மக்காவுக்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.