
- Ismathul Rahuman -
நான் பிறந்துள்ளது துக்கத்தை அனுபவிப்பதற்கே. இன்னும் என்னால் இதனை தாங்க முடியாது. அம்மா என்னை மன்னியுங்கள் என தாய்க்கு கடிதம் எழுதிவைத்துவிட்டே நீர்கொழும்பு பிரதேச செயலாளர் அயேஷ் பெரேரா மே 31ம் திகதி காலை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இம் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நீர்கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் சிறி ஜயன்த விக்ரமரத்ன முன்னிலையில் இடம்பெற்றது.
மரணமடைந்த பிரதேச செயலாளர் எழுதிவைத்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்தாவது,
ஐயோ அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். அன்னன் ஜானகவிடம் சகலதையும் கூறியுள்ளேன்.
இந்தத் துயரம் எல்லாவற்றையும் என்னால் சகித்துக்கொள்ள முடியாது. நான் பிறந்துள்ளது துக்கத்தை அனுபவிக்கவே. இதனை இனியும் என்னால் தாங்க முடியாது. ஜானக்க அன்னன் எப்படியாவது உங்களை பார்த்துக்கொள்வார். என்னை பல முறை மன்னிக்கும்படி தங்கையிடம் கூறுங்கள். நான் வேறு என்ன கூற அம்மா.
மரணமடைந்த அயேஷ் பேரேராவின் தாய் எகலியகொட, புலுக்ஹபிட்டியவை சேர்ந்த சிங்கப்புளிகே சோமலதா சாட்சியமளிக்கையில்,
மரணமடைந்த அயேஷ் பெரேரா எனது மகன் அவருக்கு பிள்ளைகள் இல்லை. அவரது முதல் பிள்ளை மரணமானார். மனைவி நான்கு மாதங்களாக ராகம வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு கதைக்க முடியாது.
மகனின் தொழில் நீர்கொழும்பு பிரதேச செயலாளர். அவர் சிகரட், மது அருந்துவதில்லை. நோய் எதுவும் இருக்கவில்லை. குழந்தை இறந்ததினாலும் மனைவி நோய்வாய்ப்பட்டதினலும் மகன் எப்போதும் கவலையிலேயே இருந்தார்.
இறுதியாக இரண்டு கிழமைக்கு முன் என்னை பார்ப்பதற்காக மாகவிட்ட இல்லத்திற்கு வந்தார். அந்த வீட்டில் தற்போது யாருமில்லை. கடந்த 30 ம் திகதி முதல் என்னை நீர்கொழும்பு உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வரச்சொன்னார். 31 ம் திகதி காலை 7 மணியளவில் மகன் பேசி வருகிறீர்களா எனக்கேட்டார். தனியே வரவேண்டாம் தம்பியுடன் வருமாறு கூறினார்.
நான் நீர்கொழும்புக்கு வந்தேன். தங்கையின் உறவினர்கள் என்னை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். மகன் தூக்கிலிட்டு மரணமடைந்துள்ளதாக அங்கு வைத்து அறிந்துகொண்டேன். நான் மகனின் உடலை அடையாளம் கண்டேன். இந்த மரணம் தொடர்பாக எனக்கு சந்தேகம் இல்லை என்றார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் திடீர் மரண விசாரணை அதிகாரி இது கழுத்தில் சுறுக்கிட்டு செய்து கொண்ட தற்கொலை என அறிவித்திருந்தார்.
நீர்கொழும்பு பொலிஸார் சாட்சியை நெறிபடுத்தினர். விசாரணையின் பின்னர் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
பூதவுடல் நீர்கொழும்பு, கொப்பராசந்தியில் அமைந்துள்ள வெஸ்டன் மலர்சாலையில் வைக்கப்பட்டு இன்று ஜூன் 1ம் திகதி மாலை நீர்கொழும்பு மஞ்ஞக்காஹேன சேமக்காலையில் தகனம் செய்யப்பட்டது.