🔴அனைவரும் ஆயத்தமாக இருங்கள்; டயானா


தன்னை கட்சியின் பிரதி செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் போலியான பத்திரங்களை பதிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சாட்டியுள்ளார்.


தான் பதவி விலகுவதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு போலியான ஆவணங்களை ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


”கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனிதர்கள் சட்டத்துடன் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள் என எனக்குத் தெரியவில்லை.


நான் அப்படியொரு இராஜினாமா கடிதத்தை இதுவரையில் எழுதவில்லை. நான் பிரதி செயலாளர் பதவியிலிருந்து இன்னும் பதவி விலகவில்லை. அப்படி விலகுவதாயின் அதற்கு முன்னர் நிர்வாகக் குழுவிலிருந்து நான் நீக்கப்பட வேண்டும்” என இராஜாங்க அமைச்சர் டயான கமகே தெரிவித்தார்.


”ரஞ்சித் பண்டார இந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பது வெட்கத்திற்குரியது. சஜித் பிரேமதாச உட்பட இந்தக் குழுவினர் அனைவரும் நன்றியில்லாதவர்கள். மேலும் அவர்கள் இக்குழுவிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள். இதற்கு மேலும் நான் பொறுமையாக இருக்க மாட்டேன்.


நான் அவர்களிடம் சொல்ல வேண்டியதெல்லாம் நீங்கள் அனைவரும் ஆயத்தமாக இருங்கள் என்பது தான்” என அவர் மேலும் தெரிவித்தார்.