🔴பேராதனை பல்கலைக்கழகத்தில் ஐந்து தற்கொலை சம்பவங்கள்


பேராதனை பல்கலைக்கழகத்தில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஐந்து தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


நேற்றைய தினம் (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய எம்.பி, உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த மேலும் இரண்டு மாணவர்களுக்கான ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய நிலை இதுவாகும் என சுட்டிக்காட்டிய எம்.பி., மாணவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வழக்கமான உணவுகளை வழங்க முடியாத நிலை இருப்பதாகவும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக எம்.பி குறிப்பிட்டார்.


“சில மாணவர்கள் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். அவர்களின் பெற்றோரால் அவர்களுக்கு பணம் அனுப்ப முடியாது. அவர்கள் விரிவுரைகளில் கவனம் செலுத்த முடியவில்லை, விரிவுரையின் போது சிலர் மயக்கமடைகிறார்கள்” என்று அவர் கூறினார்.


மஹாபொல கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மாணவர்களின் நிலைமையை மேலும் பாதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மார்க்கர் மேலும் தெரிவித்துள்ளார்.


இளைஞர்கள்தான் தேசத்தின் எதிர்காலம் என்று கூறிய எம்.பி.மார்க்கர், இவ்விவகாரத்தில் தாமதமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 


அதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பெரும்பான்மையான மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், தவறான தகவல்கள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக சிலருக்கு தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவை சரி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவதற்கு திறைசேரியிலிருந்தும் நிதி பெறப்பட்டு வருவதாக அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.