கௌரவத்தை காத்த மஹிந்த





பாராளுமன்ற அரச நிதிக்குழு தலைவர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் எடுத்த

நிலைப்பாட்டினால் பாராளுமன்றத்தின் கௌரவம் காக்கப்பட்டது என்று அரச தரப்பு பிரதம

கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.


பாராளுமன்ற அரச நிதிக்குழுவின் தலைவர் நியமனம் தொடர்பில் எம்.பி.யுமான லக்ஷ்மன்

கிரியெல்லநேற்று வியாழக்கிழமை (08) தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்

மேற்கண்டவாறு தெரிவித்தார்.


லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி,“நிதிக்குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்

என்று பல மாதங்களாக கூறி வருகின்றோம். இறுதியாக, ஜனாதிபதி வந்து ஹர்ஷ டி சில்வாவை

நியமனம் செய்தார். இதன்மூலம் சபாநாயகரிடமிருந்து எங்களுக்கு ஏதாவது செய்ய

முடியாவிட்டால் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.


நிதிக் குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு சொந்தமானது. அது கொடுக்கப்படவில்லை.

போராட்டத்தின் போது கொஞ்சம் கொடுக்கப்பட்டது. பின்னர் திரும்ப எடுக்கப்பட்டது.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை காக்க வேண்டியவர் நீங்கள்.

அரசின் பக்கம் இல்லாமல் எங்கள் பக்கம் இருங்கள்” என்றார்.


இதற்கு பதிலளித்த சபாநாயகர், “நான் யாருடைய பக்கமும் நிற்கவில்லை. அந்தக் குழு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானது. பாராளுமன்ற உறுப்பினர்களே முடிவெடுக்க

வேண்டும்” என்றார்


மீண்டும் எழுந்த கிரியெல்ல எம்.பி. “சபாநாயகரே இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும் ஆளும்

கட்சிக்கு அடிபணிந்து நீங்கள் இதனை எமக்கு வழங்கவில்லை. பாராளுமன்றத்தில் எந்தவொரு

பிரச்சினையையும் தீர்க்க முடியாவிட்டால் ஜனாதிபதியிடம் சென்று சொல்லுங்கள் என்றீர்கள்”

என்றார்.


இதன்போது எழுந்த அமைச்சர் பிரசன்ன, “எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் தவறான

விளக்கம் அளித்துள்ளார். ஹர்ஷ டி சில்வாவை வாழ்த்துகிறோம். இந்த விடயத்தில் சபாநாயகர்

எடுத்த நிலைப்பாட்டினால் பாராளுமன்றத்தின் கௌரவம் காப்பாற்றப்பட்டது” என்றார்.