மூன்று நாட்களில் வீட்டுக்கே கடவுச்சீட்டு : ஹோமாகம பிரதேச செயலகத்தில் முதலாவது சேவை : ஆரம்பித்து வைக்கிறார் ஜனாதிபதி



(இராஜதுரை ஹஷான்)


வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையத்தளம் ஊடாக சமர்ப்பித்து மூன்று நாட்களுக்குள் வீட்டில் இருந்தவாறு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் புதிய முறைமையின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வியாழக்கிழமை (15) கொழும்பு - ஹோமாகம பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.


இந்த புதிய செயன்முறை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பதாரிகள் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வருகை தந்து ஆவணங்களை கையளிக்க வேண்டிய தேவை இருக்காது என குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தில் நிலவும் முறைகேடுகள், பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு விரைவாக தீர்வு காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிற்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த புதிய செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள விண்ணப்பதாரி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்துக்கு சென்று நிகழ்நிலை முறைமையில் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட தொலைபேசிக்கு கடவுச்சீட்டு குறியீடு ஒன்று கிடைக்கப் பெறும்.


கோரப்படும் ஆவணங்களின் மூலப்பிரதிகளை ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை நிகழ்நிலை முறைமை ஊடாக சமர்ப்பிக்க முடியும். அதைத் தொடர்ந்து தொலைபேசி ஊடாக கிடைக்கப் பெறும் அறிவுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு அருகில் உள்ள பிரதேச செயலகத்துக்கு சென்று சேவை பெறுதல் கட்டணத்தை செலுத்தி கைரேகை அடையாளத்தை பதிவிட முடியும்.


இந்த புதிய வழிமுறைக்கு அமைய துரித சேவையை மூன்று நாட்களுக்குள், சாதாரண சேவையை 14 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ள முடியும். பதிவுத் தபால் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்.


இந்த புதிய செயற்திட்டத்தின் முதலாவது சேவை கொழும்பு - ஹோமாகம பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 50 பிரதேச செயலகங்களில் இந்த சேவையை ஆரம்பிக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பகட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.