நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையானது தற்காலிகமானது. பொருட்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்தல் மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைத்திருப்பதால் தான் இந்த தற்காலிக ஸ்திரத்தன்மை காணப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள ஸ்திரத்தன்மை நிலையானது என தான் நம்பவில்லை என ஹங்வெல்லவில் சனிக்கிழமை (10) நடைபெற்ற ஒரு ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
மீண்டும் கடன்களை செலுத்த தொடங்குவதுடன் இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்கினால், இலங்கை ரூபாய் மீண்டும் வலுவிழக்கும் என அவர் மேலும் தெரவித்தார்.
அத்துடன், பொதுத் தேர்தலுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டால் அது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
எந்தவொரு காரணத்திற்காகவும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால், அதற்கும் தமது கட்சி தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் குறித்து கருத்து தெரிவித்த எம்.பி., தற்போது அத்தகைய சட்டமூலங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.
இதுபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக சில விடயங்களில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த சுய தணிக்கையை நிறுவலாம்," என்று அவர் கூறினார்