🔴இஞ்சி, பச்சை மிளகாய் ரூ. 1,000க்கும் கூடியது


கனகராசா சரவணன் 


மட்டக்களப்பில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சிக்கு  தட்டுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் பொதுமக்கள் தமது கறிகளில் பச்சைமிளகாய், இஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்ள முடியாமல் பரிதவிக்கின்றனர்.  


ஒரு கிலோகிராம் பச்சைமிளகாய் 1300 ரூபாயாகவும் ஒரு கிலோ கிராம் இஞ்சி 3 ஆயிரம் ரூபாயாகவும், ஒரு கிலோ கிராம் கரட் 500 ரூபாயுமாக உயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு பொதுச் சந்தை மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்


தற்போது பச்சை மிளகாய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ பச்சை மிளகாயை 1,200 ரூபாய்க்கு கொள்வனவு செய்து 1,300 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றோம் என்று விற்பனையாளர்கள் குறிப்பிட்டனர்.


அதேவேளை சந்தையில் ஒரு கிலோ கிராம் இஞ்சி 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதுடன் சந்தையில் ஒரு கிலோ இஞ்சியை கொள்வனவு செய்ய முடியாத நிலையில், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


அவ்வாறே கரட் ஒரு கிலோ 500 ரூபாயாகவும், உருழைக்கிழங்கு 240 ரூபாயாகவும் பெரிய வெங்காயம் 150 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.


இவ்வாறான தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக தமது உணவான கறிகளில் பச்சைமிளகாய், இஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்ள முடியாமல் பொதுமக்கள் பரிதவிக்கின்றனர்.