அலவி மாமா இன்று பிறந்த பாலகனாய் மறுவாழ்வில்....!

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. அலவி மாமாவின் மறைவு எமது அனைவருக்கும் ஓர் பேரிழப்பாகும். குருநாகல் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மதங்களை கடந்து மக்களுக்காக ஆற்றிய சேவையின் வெளிப்பாடு ஜனாசாவில் அந்நிய மக்கள் வடித்த கண்ணீரில் தெரிந்தது. 


"மந்திரிதுமா" என்று அன்பாய் மக்கள் அழைப்பதும் நான் சிறு வயதாக இருக்கும் போது "அலவி மந்திரிதுமாட்ட ஜயவேவா" என்று கோஷமிட்டுக்கொண்டு குருநாகல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றதும் இன்றும்  என்செவிகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.  (இதுவே என் வாழ்வில் செய்த முதலாவதும் இறுதியூமான அரசியல் செயற்பாடு)

அது மாத்திரமன்றி நான் வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கொடுப்பு பற்றிய நேரடி செய்தி அறிக்கையிடலுக்காக பாராளுமன்றம் சென்று இருந்த போது, எதேர்ச்சையாக கண்ட அலவி மாமாவுடன் பாராளுமன்ற வளாகத்தில் அரசியல் விவகாரங்களை பேசிக்கொண்டு சுற்றிவந்தது இன்றும் விழித்திரை முன்னே நிற்கிறது. அலவி மாமா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள வாசஸ்த்தலத்தில் ஒரு சில நாட்கள் தங்கியிருந்ததும் ஞாபகத்தில் இல்லாமலில்லை. 


நான் நான்காமாடியில் இருந்த போது என்விடுதலைக்காக போராடியவர்களுள் நீங்களும் ஒருவர் என்பதை விடுதலைக்குப்பின்னர் அறிந்துகொண்டேன். அது மாத்திரமன்றி விடுதலையாகி வீடுவந்து சேர்ந்து ஒரு சில மணிநேரத்துக்குள்ளே என்னைப்பார்ப்பதற்காக ஓடிவந்ததும் நினைவிருக்கிறது. 


எத்தனையோ பேரின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உந்து சக்தியாக இருந்த தங்களது சேவைகளை படைத்த இறைவன் பொருந்திக்கொள்வானாக..!


புனித ஹஜ்  கடமையை நிறைவேற்றி இன்று பிறந்த பாலகனாய் தாய்நாடு திரும்பி ஒரு சில நாட்களில் நிரந்தர வாழ்வின் பக்கம் திரும்பியது எமக்கு கவலையாக இருந்தாலும் நாம் படைத்தவனின் நாட்டத்தை ஏற்கத்தான் வேண்டும்.


எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவரது நற்கருமங்களைப் பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்மிகு சுவன பாக்கியத்தை அவருக்கு அருள்வானாக..! 


ஆமீன்..!


- SDM Zahran -

TV Journalist 

17.07.2023