பாலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளை சர்வதேசம் கண்டுகொள்ளாமலிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கொண்டுவந்த பாலஸ்தீன் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் (18) உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஜனநாயகம் பற்றி பேசும் மேற்குலம் இஸ்ரேலின் அட்டகாசங்களை கண்டுகொள்ளாதிருப்பது கவலையளிக்கிறது. இலங்கை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தப் பிரேரணை, இலங்கை அரசாங்கத்தின் பிரகடனமாக வெளியிடப்படுவது அவசியம்.
சர்வதேச அரங்கில் நிறைவேற்றப்பட்ட பத்துக்கும் அதிகமான பாலஸ்தீன் குறித்த பிரேரணைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமலிருக்கின்றன. இந்த வஞ்சகப் போக்கிலிருந்து இஸ்ரேலும் மேற்குலகும் விலகாதவரை பாலஸ்தீனர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் நீங்கப்போவதில்லை.
நாட்டின் இடதுசாரி அரசியல் கட்சிகள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றன. இந்த ஆதரவுகள் சர்வதேசத்தளத்தில் பலமடைவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம்.
பாலஸ்தீனிலுள்ள அகதி முகாம்களுக்குள் நுழையும் இஸ்ரேலின் யூத இராணுவம் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களென வகை, தொகையின்றி அப்பாவிகளைக் கொன்று குவிக்கின்றது. சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினராக இஸ்ரேல் இராணுவம் செயற்படுகிறது. மேலும், இந்த அநியாயங்களுக்கு ஒருநாள் இறைவனின் தீர்வு கிடைக்கும். இந்த நம்பிக்கையுடன் தாம், தொடர்ந்தும் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.