🔴இலங்கையில் பொது மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை! துப்பாக்கியால் சுடப்படும் சாட்சியாளர்கள்




 புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் உள்ள இழுபறி நிலை தொடர்பில் அரசியலமைப்பு பேரவை விசேட கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரவித்துள்ளார். 


நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 


⭕சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாது

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 40 துப்பாக்கி சூட்டு பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 23 பேர் உயிரிழந்ததுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.


பகல் வேளையில் பொது இடங்களில் இவ்வாறு துப்பாக்கி சூட்டு பிரயோகம் நடத்தப்படுகிறது. நீதிமன்றங்களுக்கு சென்று சாட்சியம் வழங்குபவர்களில் பெரும்பாலானோர் துப்பாக்கி பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தாமல் உள்ள நிலையில் எவ்வாறு மக்கள் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கொண்டு சாட்சியம் வழங்குவார்கள். பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியாது.


பதவி நிலையில் இருந்து ஓய்வுப்பெற்ற சி.டி.விக்ரமரத்னவுக்கு பதவி காலம் நீடிக்கப்படுகிறதே தவிர புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படவில்லை. புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் உள்ள இழுபறி நிலை தொடர்பில் அரசியலமைப்பு பேரவை விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தவுள்ளோம் என குறிப்பிட்டார்.