வாழைச்சேனை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு – பாரவூர்திக்கு தீ வைத்த மக்கள்!

 
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிதிதென்னை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து அப்பகுதியில் மக்களிடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தண்ணீர் பவுஸரை தீயிட்டு கொளுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இவ் விபத்தில் உயிரிழந்த சிறுவன், ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் சலீம் ருஸ்திக் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


 சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,


 துவிச்சக்கர வண்டியில் மாலை நேர வகுப்புக்கு தனது சகோதரனுடன் சென்ற சிறுவன், தண்ணீர் ஏற்றி வந்த பவுஸர் ஒன்று பின்நோக்கி சென்றபோது அதனுள் அகப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


சிறுவனின் உடல் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.