"நண்பர் பாயிஸ் இல்லாத நாட்களை எண்ணிப்பார்க்கவே துணிவில்லை! " - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் உற்ற நண்பருமான ஏ.ஜே.எம்.பாயிஸின் மறைவுச் செய்தி, தன்னை திக்குமுக்காடச் செய்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார். 


அவரது அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


"பாயிஸின் இழப்பு அரசியல் உறவுகளுக்கு அப்பால் அந்தரங்கமாக என்னைப் பாதித்துள்ளது. அரசியலில் நான் எதிர்கொண்ட சவால்கள், சிறை வாழ்க்கைகளின் போது எனக்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் இன்னும் நிழலாடுகின்றன.


புனித நோன்பின் ஸஹருடைய நேரத்தில் நான் கைதான செய்தி, நண்பர் பாயிஸை வெகுவாகப் பாதித்திருந்தது. தலைவருக்கான பணிகளைத் தொண்டனாகவும் தோழனாகவும் மற்றும் உடன்பிறந்தாற் போன்ற உணர்விலும் முன்னெடுத்தவர் மர்ஹும் ஏ.ஜே.எம் பாயிஸ்.


பிடரியின் உயிர் நரம்பை விடவும் சமீபித்திருக்கிறது நமது வாழ்நாட்களின் முடிவுகள். இந்த இறை யதார்த்தத்தை நண்பர் பாயிஸின் திடீர் மறைவு அழுத்தமாக உணர்த்தியுள்ளது.


கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக அரசியலை ஆரம்பித்த அவர், மேல்மாகாண சபை உறுப்பினராக வருமளவுக்கு வளர்ந்தார். மக்களுக்கு பணிசெய்யும் அவரது மகத்தான மாண்பு, எல்லா அரசியல்வாதிகளிடமும் இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பு. 


அதிகாரமில்லாவிடினும் எவரையாவது அணுகி மக்கள் தேவை தீர்த்த ஒரு மாண்பாளன் மர்ஹும் பாயிஸ். கொரோனா காலத்துக் கெடுபிடிகளுக்குள்ளும் களப்பணியாற்றி மக்களுக்கு ஆறுதலாக செயற்பட்டார். கொழும்பு மாவட்டத்துக்கு வெளியிலும் பாயிஸால் பணியாற்ற முடிந்தது.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரான அவர், தன்னிடமிருந்த சிங்களப் புலமையைப் பயன்படுத்தி தெளிவான கருத்துக்களை முன்வைப்பார். அவரது சாதுவான தோற்றமும் மிருதுவான புன்னகையுமே கவர்ச்சியான மக்கள் தலைவனாக அடையாளம் காட்டியது. என்ன செய்வது? எல்லோரும் என்றோ ஒரு நாள் சந்திக்கவுள்ளதை நண்பர் ஏ.ஜே.எம்.பாயிஸ் இன்று சந்தித்துவிட்டார். அவரது ஆத்மாவை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!


அன்னாரின் திடீர் மறைவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர், உறவுகள், ஆதரவாளர்கள் மற்றும்  நண்பர்களுக்கு அல்லாஹுத்தஆலா பொறுமையை வழங்குவானாக!"