கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம் - நுஸைபை தாடியுடன் பரீட்சை எழுத அனுமதிக்குமாறு நீதிமன்றம் கட்டளை!

 




தாடி வைத்திருந்தமைக்காக பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் அடாத்தாக தடுக்கப்பட்டமைக்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட மாணவன் நுஸைப் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுத்த வழக்கு இன்று (4) ஆதரவுக்காக (Support) எடுக்கப்பட்ட போது, குரல்கள் இயக்க ( Voices Movement ) சட்டத்தரணி றுடானி சாஹிர் ( Rudane Zahir ) அவர்களின் அறிவுறுத்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்கள் மாணவன் நுஸைப் தரப்பிற்காக ஆஜராகியிருந்தார். 


கடந்த தவணைகளில் வேறு காரணமொன்றின் அடிப்படையில் பரீட்சையினை தாம் ஒத்தி வைத்திருப்பதாகவும் அடுத்த வழக்குத் தவணை வரை பரீட்சையை தாம் நடாத்தப் போவதில்லை என்ற ஏற்பினை (Undertaking) நீதிமன்றின் முன் கொடுத்திருந்த பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி பரீட்சையினை நடாத்தப் தாயாராகவுள்ளதாக நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தது.


மாணவனது உரிமைகளான மாணவன் தாடியோடு பரீட்சை எழுத அனுமதிக்கப்பட வேண்டும், விரிவுரைகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும் மாணவன் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கு தடையாக தாடி வைத்திருக்கும் காரணத்தைக் காட்டி படிப்பு சார் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கக் கூடாது போன்ற நிவாரணங்களைக் கேட்டு மாணவர் தரப்பு சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன்வைத்திருந்தனர். எதிர் தரப்பினரான பிரதிவாதிகள் மேற்சொன்ன விடயங்களுக்கு தமது எதிர்ப்பினை நீதிமன்றில் வெளிப்படுத்தியிருந்தனர்.


இரு தரப்பு வாதங்கள் மற்றும் ஆவணங்களை பரசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மாணவன் நுஸைப் அவர்கள் எதிர்வரும் 09 ஆம் திகதி தாடியுடன் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்ற (இடைக்கால) கட்டளையிட்டதுடன் அதனை பல்கலைக்கழகத்திற்கு உடனே அறிவிக்கவும் உத்தரவும் பிறப்பித்திருக்கிறது.


இவ்விவகாரத்தில் ஆரம்பம் முதலே குரல்கள் இயக்கமானது (Voices Movement) அதன் தவிசாளர் சட்டத்தரணி றாசி முகம்மட் (Raazi Mohamed ) அவர்களின் பாரிய பங்களிப்புடன் மாணவன் நுஸைபின் கலாச்சார உரிமைக்காக குரல் கொடுத்து வருவதுடன் இதில் இன்று (ஆரம்ப கட்ட) வெற்றியும் கண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.