🔴கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : பின்வாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி


சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தினை வியாழன் (10) நடத்தலாம் என பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் தெரிவித்துள்ள நிலையில், அந்த பிரேரணையினை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.


அதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் பல இருப்பதால் எதிர்வரும் இரண்டு வாரங்களை அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இந்த பிரேரணையை இந்த வாரமே விவாதத்திற்கு உட்படுத்துமாறு சுகாதார அமைச்சரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த வாரமே விவாதத்தை நடத்த முடியும் என அரச தலைவர்கள் மேலும் தெரிவித்தனர்.


இதனால் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மேலும் பிற்போடப்படவுள்ளது.


நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னர் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விவாதமும் கிரிக்கெட் தொடர்பான விவாதமும் நடத்தப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் இங்கு அறிவித்துள்ளனர்.


இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சாகர காரியவசம், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.