சர்வதேச அரங்கில் கொழும்பின் மீது கவனத்தைக் குவித்திருக்றது தாவூதி போரா சமூகத்தின் சர்வதேச மாநாடு. இலங்கையில் மிகவும் சிறிய சனத்தொகையைக் கொண்ட மிகப்பெரிய பலம் வாய்ந்த வர்த்தக சமூகம் தான் இந்த போரா சமூகம்.
இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் இவர்களின் கைகளில் கட்டுண்டு கிடக்கிறது. அக்பர் பிரதர்ஸ் முதல் முசாஜி ஜபர்ஜி, ஹேமாஸ் என்று இவர்களின் பெயர்களை அடிக்கிக் கொண்டே போகலாம்.
இந்த மாநாடு ஜூன் 27ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சுமார் 15,000 பிரதிநிதிகள் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது, இது அதன் சர்வதேச முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இப்படியான ஒரு முக்கியமான நிகழ்வின் மத்தியில், 'சின்ன சஹ்ரான்' என அறியப்படும் பஸ்லூர் ரஹ்மான் மொஹமட் சஹ்ரான் என்ற நபர், அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர் பம்பலப்பிட்டி ரயில் நிலையம் மற்றும் போரா பள்ளிவாசல் பகுதிகளை வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தபோது, போரா பள்ளிவாசல் அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏதேனும் குற்றச் செயலுக்குத் திட்டமிட்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டதா என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை அரம்பித்துள்ளனா். அவரிடமிருந்த ஒரு ஸ்மார்ட் ஃபோனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
யார்_இந்த_சின்ன_சஹ்ரான்?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு நேரடி தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் இந்த நபர், "பொடி சகரான்" என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், சஹ்ரானும், ஏனைய தற்கொலைக் குண்டுதாரிகளும் ஐ.எஸ். அமைப்புக்குச் சத்தியபிரமாணம் செய்யும் வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அந்த வீடியோவை ஐஎஸ் அமைப்புக்கு அனுப்பி லைசன்ஸ் வாங்கியதே இந்த “சின்ன சஹ்ரான்”தான் என்று கூறப்படுகிறது.
சின்ன சஹ்ரானின் முயற்சியால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக தகவல்கள் வெளியாகின.
“சொனிக் சொனிக்” என்று எமது காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்த புலனாய்வு பிரிவின் அதிகாரியாக கருதப்படும் நபரின் பெயரும் இவருடன் தொடர்புபட்ட ஒரு கதாபாத்திரமாகும்.
பிணையில்_வெளியே_வந்த_சந்தேகநபர் ஏன்_போரா_மாநாடு_வளாகத்தைவீடியோ_செய்தார்?
பஸ்லூர் ரஹ்மான் மொஹமட் சஹ்ரான் என்ற இந்த சின்ன சஹ்ரான், 2019 ஏப்ரல் 24ஆம் திகதி மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால், 2023 மார்ச் மாதம் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர் என நம்பப்படும் ஒருவர், பிணையில் வெளிவந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கையொப்பம் இடும் ஒரு நபர், எந்தவித அச்சமுமின்றி, பாதுகாப்பு வலயமான போரா மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்று வீடியோ எடுப்பதற்கு பின்னணியில் யார் இருந்திருப்பர்? இது பலத்த சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.
சந்தேகத்திற்கிடமான_சம்பவங்களின் தொடர்ச்சி..
2025ம் வருட ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த வேளையில், பெரிய வெள்ளிக்கிழமை அன்று சஹ்ரானின் மனைவி ஹாதியா கொழும்புக்குச் சுற்றுலா வந்திருந்தார்.
தனது ஊரைச் சேர்ந்த பலருடன் கொழும்பு தாமரைக் கோபுரத்தைப் பார்க்க வந்திருந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
வெள்ளிக்கிழமை தினங்களில் முஸ்லிம்கள் சுற்றுலா செல்வது அரிதான விடயம். என்றாலும் உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்கள் கொழும்புக்கு சுற்றுலா வந்ததன் பின்னணி என்ன?
அன்றைய தினம் மாலை தெஹிவளை பொலிஸார் ஹாதியா பயணித்த குறித்த பேருந்தைச் வழிமறித்து சோதனையிட்டதாக செய்திகள் வெளிவந்தன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட ஒரு குடும்பம், அதே தினத்தில் கொழும்புக்கு வருவதும், அதுவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் தருணத்தில் வருவதும் எவ்வளவு பிழையானது? இதன் பின்னணி எதுவாக இருக்கும்?
இதே வரிசையில்தான், போரா சமூகத்தின் மாநாட்டை வீடியோ எடுக்க வந்த இந்த சின்ன சஹ்ரானின் செயற்பாடும் உள்ளது. இந்நாட்டில் இன்னும் ஒரு சதிக்கோட்பாடு வடிவமைக்கப்படுகிறதா? முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
அஸீஸ் நிஸாருத்தீன்