'என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள்
-எஸ். ஹமீத்.


கடந்த வருடம் சர்வதேச ஊடகங்களில் அந்த ஐந்து வயது சிரியச் சிறுமியின் வேண்டுகோள் முக்கிய பேசு பொருளாகியிருந்தது.  


''என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள். அப்போது அவரால் என்னை மீண்டும் பார்க்க முடியும்!''


இந்த வேண்டுகோள் உலகின் இதயத்தை உலுக்கி விட்டிருந்தது. ஆனாலும் அவளது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது.


அவளது பெயர் கோஸ்யாசி .மம்மூன் காலித் நாஸிர் என்பது அவளது தந்தையின் பெயர். அவருக்கு  இருபத்தி ஏழு வயது. சிரியாவின் இட்லிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். சிரிய நாட்டின் அரச  படைகளினால் வீசப்பட்ட இரசாயனக் கொத்துக் குண்டுகளினால் தன் இரு கண்களையும் தனது இரண்டு கால்களையும், வலது கையின் பல விரல்களையும்  இழந்திருந்தார். உடல் முழுவதும் எரிகாயங்கள். கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குச் சென்றுவிட்டார்.


வைத்தியர்கள் எவ்வளவோ போராடிக் கடைசியில்  அவரின் உயிரைக் காப்பாற்றி விட்டார்கள். ஆனால், போன கால்களும் கண்களும் விரல்களும் போனதுதான்.


பல பரோபகாரிகள் அவரையும் அவரது மனைவியையும் ஐந்து குழந்தைகளையும்  துருக்கிக்கு அழைத்து வந்து விட்டனர். துருக்கியின் வட மாநிலமான ஹட்டேயிலுள்ள ரெஹான்ஹ் நகரத்தில் அவர்களுக்குப் புகலிடம் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் மிக்க போராட்டங்களோடு அவர்கள் வாழ்க்கை நடத்தினர். அவ்வேளை, அவர்களின் மீது இரக்கம் கொண்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் காலித் நாசரை ஆஸ்ப்பத்திரிக்கு எடுத்துச் சென்று சிகிச்சையளித்தனர். அப்போதுதான் டாக்டர்களிடம் கதறியழுதபடிக் கூறினாள் அந்தப் பிஞ்சு வயதான கோஸ்யாசி. ''என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள். அப்போது அவரால் என்னை மீண்டும் பார்க்க முடியும்!''


துருக்கிய டாக்டர்கள் அளித்த சிகிச்சையினால் அவரது உடற்காயங்கள்  ஓரளவு  குணமடைந்தாலும் அவரால் நடக்கவோ, பார்க்கவோ முடியாமல்தான் உள்ளது.


தனது தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வீதியில் சுதந்திரமாக நடக்க வேண்டுமென்பதே கோசியாசியின் தற்போதைய கனவு. அத்தோடு, பாடசாலையில் வரைதல் பாடத்தின் போது அவள் அதிகமாக வரைவது இரண்டு கால்களைத்தான். ''இந்தக் கால்களை எனது தந்தைக்குப் பொருத்த முடியுமா?'' என்று அவள் தன் ஆசிரியரிடம் கேட்கிறாள்.


ஒரு டாக்டராக விரும்புகிறேன். அப்போது என் தந்தையை என்னால் முழுமையாகக் குணப்படுத்திவிட முடியுமென நம்புகிறேன்!'' என்றும் அவள் அடிக்கடி கூறுகிறாள்.


செய்தி நிறுவனங்கள் காலித் நாசிரையும் அவரது குடும்பத்தையும் பேட்டி கண்டன. அப்போது கோஸ்யாசி தன்னுடைய இன்னொரு வேண்டுகோளை ஆசையோடு முன் வைத்தாள். ''நான் துருக்கி நாட்டின் ஜனாதிபதியைப் பார்க்க விரும்புகிறேன்!''


சிறுமியின் அந்த  ஆசை கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேறியது. துருக்கிய ஜனாதிபதியின் விஷேட  அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் கோஸ்யாசி தனது தந்தை காலித் நாஸிருடனும் சகோதரி சிட்ரேயுடனும் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று அதிபர் எர்டோகனையும் அவரது பாரியாரையும் சந்தித்தாள். கோசியாசியை அதிபர் எர்டோகன் அணைத்து முத்தமிட்டார்.
'என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள் 'என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள் Reviewed by NEWS on February 02, 2017 Rating: 5