Top Newsமக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றுக்காலை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

20.05.2019 ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளன. அங்கு ஜனாதிபதி மேலும் கூறியிருப்பதாவது ,

நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு தேசிய பாதுகாப்பு சபைக்கு அப்பால் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதில் பிரதமர் ,சபாநாயகர் ,எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்கள் அங்கம் வகிப்பார்கள். பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் நானும் அதில் இருப்பேன்.அந்த சபை அடிக்கடி கூடி ஆராயும்.

இப்போது எல்லோரும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரை கைது செய்யுமாறு கோருகின்றனர்.அப்படியெல்லாம் செய்துவிட முடியாது.அவர்கள் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அப்படி செய்தால் முஸ்லிம்களை தீவிரவாதத்திற்குள் நாங்கள் தள்ளுவதாகவே அமையும். அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்னமும் பாராளுமன்றத்திற்கு வரவில்லை .அது விவாதிக்கப்படும் திகதி தீர்மானிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் தீர்மானம் எடுப்போம். – என்றும் மைத்ரி குறிப்பிட்டாரென அறியமுடிந்தது. 


வெசாக் போயா தினத்துக்கு மறுநாள் (19) இரத்தினபுரி நகரில் புகைப்படம் எடுத்தமைக்காக, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு இரத்தினபுரி பதில் மஜிஸ்ட்ரேட் மல்காந்தி வெகுணகொட உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இந்த சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரத்தினபுரி நகரில் வசிக்கும் மொகமட் நப்ரான், மொஹமட் அவ்சான் மற்றும் கே. அனுஸ்க தில்சான் களுபஹன எனும் மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சந்தேகநபர்களின் கையடக்கத் தொலைபேசியில் காணப்படும் தகவல்கள் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகம் அல்லது மொரட்டுவ பல்கலைக்கழகம் என்பவற்றிலுள்ள தொலைபேசி நிபுணர்களின் அறிக்கையைக் கோருமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த இளைஞர்கள் மூவரும் கடந்த (19) ஆம் திகதி இரத்தினபுரி அங்கம்மன பல்லேகந்த வனப் பகுதியிலும் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளனர். பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் அதிநவீன 2 கெமராக்கள், மோட்டார் சைக்கிள், மோட்டார் சைக்கிள் இலக்க தகடுகள் இரண்டு, இராணுவத்தினர் பயன்படுத்தும் தலைக்கவசம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களின் புகைப்படம் எடுக்கும் நடவடிக்கை பொது மக்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுவதனால், இராணுவ தலைக்கவசம், இலக்கத் தகடுகள் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இவர்களை கைது செய்யுமாறு சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பிரதேசவாசிகள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளான விசான் மைத்திரிபால, ஜனக சுமேதா ஆகிய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனது தரப்பு சந்தேகநபர் வெசாக் தினத்தில் புகைப்படம் எடுத்ததற்கு நகரின் அழகைப் பதிவு செய்வதற்கே ஆகும் என மூன்றாவது சந்தேகநபர் அனுஸ்கா தில்சான் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிமன்ற வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்ததாகவும் இன்றைய சகோதர ஊடகமொன்று அறிவித்துள்ளது. 
கைதான எவரையும் விடுவிக்குமாறு நான் கோரவில்லை!- 
அமைச்சர் ரிஷாத் திட்டவட்டம் 
ஏ.எச். சித்தீக் காரியப்பர்

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு நான் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவிடம் எந்தக் கோரிக்கையையும் முவைக்கவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக இராணுவத் தளபதியுடன் தான் தொடர்பு கொண்டு வினவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

'உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே 'என இராணுவத் தளபதி நேற்று (16) ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தமை தொடர்பில் தனது கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதால், நீர்கொழும்பு பிரதேசத்தில் பதற்ற நிலைமைகள் தோன்றலாம் என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் எனக்குத் தெரிவித்தனர். இதன் காரணமாக நீர்கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து நான் இராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கூறினேன். மேலும், சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ஒருவர் தொடர்பில் தெரிவித்து, அவ்வாறான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற விபரத்தையே நான் இராணுவத் தளபதிடம் வினவினேன். ஆனால் அந்த நபரை விடுவிக்குமாறு நான் கோரவில்லை.

இராணுவத் தளபதியுடனான உரையாடலை நான் எனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன். தேவையாயின் அதனைத் தர முடியும் 
இதனை தவிர, சந்தேகத்தில் கைதான எவரையும் நான் விடுக்குமாறு கோரவில்லை என்பதனை பொறுப்புடன்கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இராணுவத்தினரிடமோ பொலிஸாரிடமோ வேறு எவரிடமோ நான் எவரையும் விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுவிக்கவில்லை என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நெத் எப்.எம்


அமைச்சர் மங்கள சமரவீர முஸ்லிம் சமூகத்தால் கொண்டாடப் படவேண்டியவர்.அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து மிக நடுநிலையாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை மிகவும் மதித்தும் நடந்து கொண்ட ஒரு அமைச்சர் என்றால் அது மங்கள சமரவீர மட்டும்தான்.

அவர் எப்போதுமே இந்த இனவாதத்துக்கு எதிராக மிக நடுநிலையாக குரல் கொடுத்து வருபவர்.அண்மையில் நடந்த நிறுவனத்தலைவர்களின் கூட்டமொன்றில் அமைச்சர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில்...

"நாட்டில் இனவாதத்தை போஷிப்பதில் ஹிரு, தெரன ஆகிய இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பெறும்பங்கு இருக்கிறது.இந்த நிறுவனங்கள் தெளிவாக ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இயங்கிவருகின்றன.

இலங்கையில் 99 வீதமான முஸ்லிம்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள்,தீவிரவாதிகளை அரச படைகளுக்கு காட்டித் தந்தவர்கள்.ஆனால் முஸ்லிம் வீடுகளில் கடு,கடு என்று சிங்களமக்கள் மத்தியில் முஸ்லிம் வெறுப்பை உருவாக்கியவர்கள் இந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களும்தான்.

எனவே இந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் விளம்பரம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துமாறு நிறுவனத் தலைவர்களுக்கு நிதி அமைச்சர் என்றவகையில் மங்கள கட்டளையிட்டார்.இனிவரும் காலங்களில் குறித்த தொலைக்காட்சி நிறுவனங்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதனை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு விளம்பரம் வழங்குவது பற்றி சிந்திப்போம் என்றார்"ஒரு சாதாரண சிங்களக் குடிமகன், ஹிரு, தெரன சொல்லும் செய்திகளை நம்பியே நாட்டு நடுப்புகள் குறித்த தீர்மாணத்துக்கு வருகிறான், எனவே இவர்கள் பொறுப்பாக நடந்து இருந்தால் முஸ்லிம்கள் குறித்த அச்சம்,வெறுப்பு சிங்கள மக்கள் மத்தியில் இந்தளவுக்கு ஏற்பட்டு இருக்காது.

பெரும்பான்மை மக்களின்,தேரர்களின்,ஊடகங்கின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சர் மங்கள சமரவீர நடந்து கொள்ளும்விதம், எடுக்கும் தீர்மாணங்கள் அனைத்துமே மிகவும் போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது.

அமைச்சர் மங்களவிற்கு இறைவன் அருள்புரியவேண்டும்.

Safwan Basheer
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹ்ரானின் மகளை எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக 4 வயதான மகள் தாயுடன் குற்ற புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

எனினும் இதிலிருந்து தப்பித்த பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது உடல்நிலை தேறியுள்ள நிலையில், கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.