பெண்காதி விடயத்தில் அடம்பிடிக்கும் றவூப் ஹக்கீம் : இஸ்லாமிய வழிமுறையை ஏற்க வேண்டும் – ஐக்கிய‌ காங்கிர‌ஸ்




இஸ்லாம் அனும‌திக்காத‌ பெண் காதி விட‌ய‌த்தில் ர‌வூப் ஹக்கீம் த‌ன‌து பிடிவாத‌த்தை மாற்றி ஏனைய‌ முஸ்லிம் எம்பிக்களுட‌ன் இணைந்து அமைச்ச‌ர் விஜயதாச முன்வைத்த திருத்த‌த்துக்கு மாற்ற‌மான‌ திருத்த‌த்துக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌ வேண்டுமென‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்த‌தாவ‌து,

முஸ்லிம் திரும‌ண‌ச்ச‌ட்ட‌த்தில் எத்த‌கைய‌ திருத்த‌மும் கூடாதென்ப‌தே எம‌து க‌ட்சியின் முடிவாகும். ஆனாலும், அண்மையில் அமைச்ச‌ர் விஜயதாச‌ ராஜ‌ப‌க்ஷ‌ அவ‌ர்க‌ளால் முஸ்லிம் திரும‌ண‌ச்ச‌ட்ட‌த்திலுள்ள‌, நிகாஹ் என்ற‌ வ‌ச‌ன‌ம், முஸ்லிம் என்ற‌ சொற்ப‌த‌ம் போன்ற‌வ‌ற்றை நீக்கி, பெண் காதி, பெண் ப‌திவாள‌ர் போன்ற‌ ப‌ல‌ தான்தோன்றித்த‌ன‌மான‌ திருத்த‌ங்க‌ளை முன் வைத்து இத‌ற்கு பாராளும‌ன்ற‌ முஸ்லிம் எம்பிக்க‌ளின் ஒப்புதலுக்காக‌ முன் வைத்திருந்தார்.

இத‌னை ஏற்காத‌ முஸ்லிம் எம்பிக்க‌ள் ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவுட‌ன் இணைந்து வேறு திருத்த‌ங்க‌ள் கொண்ட‌ புதிய‌ திருத்த‌ப்பொதியை முன் வைத்துள்ள‌தாக‌வும் அதை ப‌தினேழு எம்பிக்க‌ள் ஏற்றுக்கொண்ட‌தாக‌வும் அதில் பெண் காதி நீக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தால் முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் ர‌வூப் ஹ‌க்கீம் ம‌ட்டும் அதை ஏற்காது, பெண் காதி வேண்டுமென‌ அட‌ம்பிடிப்ப‌தாக‌வும் த‌க‌வ‌ல்க‌ள் சொல்கின்ற‌ன‌. இந்த‌ப்பொதியின் முழு அம்ச‌மும் எம‌து க‌ட்சிக்கு இன்ன‌மும் கிடைக்க‌வில்லையாயினும் இது ப‌ற்றிய‌ ஊர்ஜித‌மான‌ த‌க‌வ‌ல்க‌ள் கிடைத்துள்ள‌ன‌. பெண் காதிக்கு இஸ்லாத்தில் இட‌மில்லையென்ப‌து இஸ்லாத்தின் ஆர‌ம்ப‌கால‌ உல‌மாக்க‌ள் ஏகோபித்த‌ முடிவாகும். முஸ்லிம் என்ற‌ பெய‌ர் கொண்ட‌ க‌ட்சித்த‌லைவ‌ரான‌ ரவூப் ஹ‌க்கீம் முஸ்லிம் திரும‌ண‌ ல்ச்ச‌ட்ட‌த்தில் எந்த‌த்திருத்த‌மும் வேண்டாமென‌க்கூறியிருந்தால் அவ‌ரை நாம் மிக‌வும் வ‌ர‌வேற்றிருப்போம்.

மாறாக‌, இஸ்லாம் ஏற்காத‌ பெண் காதி விட‌ய‌த்தில் முஸ்லிம்க‌ளின் அதிக‌ வாக்குகளைக்கொண்ட‌ ர‌வூப் ஹ‌க்கீம் அட‌ம்பிடிப்ப‌து இஸ்லாத்துக்கும் அவ‌ர‌து க‌ட்சிக்கு வாக்களித்த‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ளுக்கும் அவ‌மான‌த்தை ஏற்ப‌டுத்துவ‌தாகும். ஆக‌வே, ர‌வூப் ஹ‌க்கீம் பெண்காதி விட‌ய‌த்தில் த‌ன‌து நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள‌ வேண்டுமென்ப‌தை அவரிடம் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

நூருல் ஹுதா உமர்