அங்க அசைவுகளினூடான தொடர்பாடல்

மெய்ப்பாடு, அல்லது அங்க அசைவினால் தொடர்பாடல் என்பது எப்போது ஆரம்பித்தது எனத் திட்டவட்டமாக் கூற எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. ஆனாலும் இது மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றது என்பதை மாத்திரம் உறுதியாகக் கூறமுடியும். சாதாரண பொது மக்கள் மத்தியில் தமது அன்றாடத் தொடர்பாடல் தேவைகளை நிறைவேற்றிக் கொற்வதற்காக, மெய்ப்பாட்டுத் தொடர்பாடல் என்பது அவர்களை அறியாமலே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.
அங்கங்களை அசைப்பதும், அதனூடாக தொடர்பாடல் மேற்கொள்வதும், என்பது உயர் பட்டப்படிப்புக் கல்வியில் ஒரு தனியலகாக கருதப்படுகின்றது. எனினும் தமிழர்கள் மத்தியில் சாதாரண வாழ்வில் இடம்பெறும் அங்க அசையினூடான தொடர்பாடல் என்பது இடத்திற்கு இடம், தேசங்களின் கலை, கலாச்சாரம் என்பவற்றின் தாக்கங்களுக்கு உட்பட்டு, ஒரு தனித்துறையாக நடனம் என வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது: நடனம் என்பது தனியொரு மொழியாக கொண்டு, அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஆண்களும், பெண்களுமாக நடனக்கலையாக பயின்றுவருகின்றனர்.
மெய்ப்பாடட்டுத் தொடர்பாடல் என்பது, தனிக்கலையாக வளர்ந்த காரணத்தினால் மெய்ப்பாடு தொடர்பான ஆராய்ச்சிகள் எல்லாம் நடனம் அல்லது கூத்துச்சார்ந்த ஆராய்ச்சிகளாக இடம்பெறுகின்றதா என எண்ணத் தூண்டுகின்றது.
மொழியைத் தொடர்பாடல் ஊடகமாக உபயோகிப்பதற்கு முற்கட்ட காலத்திலும், இன்றும்கூட மொழியல்லாத தொடர்பாடல் முறை, அதாவது: அங்க அசைவுகளைக்கொண்டு தொடர்பாடலை மேற்கொள்வது, முக்கிய தொடர்பாடல் முறையொன்றாக விளங்குகின்றது. மெய்ப்பாட்டுத் தொடர்பாடல் முறையானது சைகை மொழியாக வாய் பேசாதவர்களுக்காக நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் உபயோகிக்கப்படுகின்றது. இருப்பினும் மொழியைத் தொடர்பூடகமாகப் பயன்படுத்திப் பேசுபவர்கள் தாம் தொடர்புகொள்ளும் மற்றவருக்குப் புரியும் வகையில், அங்க அசைவுகளை உபயோகித்து தொடர்பாடலை மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.
மெய்ப்பாட்டின் மூலம் தொடர்பாடலை மேற்கொள்வது என்பது, உலகில் உள்ள சமூகக் குழுக்களிடையே பெரும்பாலும் ஒன்றாக இருப்பதில்லை. ஆனாலும், அடிப்படையான சில அசைவுகள் பொதுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது: சிரிப்பு, அழுகை, கோபம் போன்ற மனிதனது அடிப்படையான சில விடயங்களில் உலகில் உள்ள அனேகமானவர்கள் பொதுவான அசைவையே மெற்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாதாரணமாக வாய்மொழியை உபயோகித்துத் தொடர்பாடலை மேற்கொள்ளும் ஒருவர், தன்னுடைய கருத்தினைத் தெளிவாக கூறுவதற்காக அண்ணளவாக 65 வீதத்திற்கு மெய்ப்பாட்டுத் தொடர்பாடல் முறையைக் கையாள்வதாக சில வெளிநாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 35 வீதமே நேரடித்தொடர்பாடலில் மொழி பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இலங்கையில், அல்லது தமிழர்களிடையே அங்க அசைவின் மூலம் தொடர்பாடல் சம்பந்தமான முழுமையான ஆய்வு இன்று வரை செய்யப்படாத காரணத்தினால் இவை பற்றிய மேலதிக தகவல்களைப் பெற முடியாதுள்ளது. இருப்பினும், சாதாரண ஒவ்வொருவரும் தங்களுடைய அறிவு, அனுபவம் என்பவற்றுக்கு ஏற்ப, அங்க அசைவிலான தொடர்பாடலை விளங்கிக்கொள்கின்றார்கள்.
அங்க அசைவிலான தொடர்பாடல் என்பது, வகுப்பறை ஆசிரியர்களுக்கும், வைத்தியர்கள், நடனக்காரர்களுக்கும், திரைப்படங்கள், மற்றும் ஒளிபரப்புத் துறையில் உள்ளவர்களுக்கும் மிக அவசியமானதாகும். மேற்படி துறையில் உள்ளவர்கள், அங்க அசைவிலான தொடர்பாடல் உத்திகளில் கவனம் செலுத்துவது தவிர்க்க முடியாததாகும். குடும்பப்பெண்கள், கணிகைகளுக்கு கூட அங்க அசைவுத் தொடர்பாடல் அத்தியாவசியமானது.
பொதுவான உலக மக்களுக்களின் மெய்ப்பாட்டுத் தொடர்பாடலுக்குப் பின்வருவனவற்றை உதாரணங்களாகக் கொள்ளலாம்.
அதேவேளையில், அங்க அசைவுகள் என்பது, மக்கள் வாழும் பிரதேசம், அவர்களின் உணவுப் பழக்கம், அக்குறிப்பிட்ட சமூகம் சார்ந்த நம்பிக்கைகள், அச்சமூகத்தின் அறிவு வளர்ச்சிநிலை போன்ற பல காரணிகளில் தங்கியிருக்கும்.
இதனை மேலும் விளங்கிக்கொள்வதற்கு, உதாரணமாக இலங்கையின் ஒரு தமிழ்ப்பிரதேசத்தில் பிறந்து, தமிழக் கலாசாரத்தில் வாழ்ந்து வருகின்ற ஒரு தமிழ்ப் பெண்ணும், இடம்பெயர்ந்து உலகின் பிறிதொரு தேசத்தில் பிறந்து, வளர்ந்து வருகின்ற தமிழ்ப் பெண்ணும் ஒரே வகையிலான மெய்ப்பாட்டுத் தொடர்பாடலை மேற்கொள்ளுவார்கள் என எதிர்பார்ப்பது தவறானதாகும். இருவரும் தமிழர்களாக இருந்தும், அவர்கள் வாழும் பிரதேசத்தின் தாக்கங்கள் இருவரினதும் மெய்ப்பாட்டு வெளிப்பாட்டின் வேறுபாட்டிற்கு காரணமாக இருக்கும்.