Jan 5, 2018

வட்டாரத்துக்கு உலமா ஒருவரை பள்ளிவாசல் மீள்நியமனம் செய்யுமானால் தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொள்வேன்!சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையைப் பெறும் விடயத்தில் பள்ளிவாசல் எடுத்திருந்த முன்னெடுப்புக்களை தான் உன்னிப்பாக அவதானித்து வந்ததாகவும் இறுதி நேரம் வரைக்கும் கட்சிசாராத உலமாக்களே நிறுத்தப்படுவர் என எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால் மற்றவர்கள் கூறித்திரிந்ததை உண்மைப்படுத்தும் வகையில் வேட்பாளர்களை பள்ளிவாசல் நியமித்ததன் காரணமாகவே தேர்தலில் களமிறங்குவது என்ற தீர்மானத்துக்கு தான் வந்ததாகவும் இப்போதும் குறித்த வேட்பாளர்களை நீக்கிவிட்டு உலமாக்கள் நியமிக்கப்படுவார்களானால் தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொள்வேன் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் தொழிலதிபரும் சமூக சிந்தனையாளருமானா ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கல்முனை மாநகரசபைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கியதேசியக் கட்சியில் போட்டியிடும் 20 ஆம் வட்டார வேட்பாளர் ஏ.நசார்டீனின் தேர்தல் அலுவலக திறப்பு நிகழ்வும் மக்கள் சந்திப்பும் 2018-01-04 ஆம் திகதி குறித்த வட்டாரத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே  மேற்கண்டவாறு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராக இருக்கின்ற போதிலும் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஒருதடவையேனும் உள்ளுராட்சிசபை விடயமாக தன்னை கலந்தாலோசிக வில்லையென்றும் இருந்தபோதிலும் தான்னால் முடிந்த சகல முன்னெடுப்புக்களையும் தான் செய்ததாகவும் தற்போதும் செய்து வருவதாகவும், தனிப்பட்ட முறையில் தன்னை பள்ளிவாசல் குறைகாண முடியாது என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மட்டுமே பெற்றுத்தர முடியும் என்று தெரிவித்த  யஹ்யாகான், ஊருக்கு உள்ளுராட்சிசபை வேண்டும் என உள்ளத்தால் விரும்புபவர்கள் கட்சிக்கு வாக்களித்து அதனை பலப்படுத்துவதனூடாகவே அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.

தங்களது தனிப்பட்ட அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்காக புனிதமான பள்ளிவாசலை முன்னிலைப்படுத்தி மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதனூடாக ஊரையும் மக்களையும் காட்டிக்கொடுத்து வெற்றிகளை ஈட்ட முனைபவர்கள் அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், காடையர்களை கையில் வைத்துக்கொண்டு வீடுகளுக்கு கல்களை எறிந்து திரிவதைத் தவிர்த்து ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்ற முனைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேர்தல் செயலகத்தைத் திறந்துவைத்து உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான ஆரம்பகால  அமைப்பாளரும் முன்னாள் கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உபதலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான தேர்தல் குழுவின் தலைவருமான  ஏ.எல்.எம்.றசீட் (புர்கான்ஸ்) தனது உரையில்,

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையின் அவசியத்தை தான் உள்ளிட்ட குழுவினரே கடந்த 1988 ஆண்டு முதல் வலியுறுத்தி வந்ததாகவும் அப்படியான வேளையிலேயே முதலில் பிரதேச செயலகத்தைப் பெற்றதாகவும் தெரிவித்த அவர், முஸ்லிம் காங்கிரசுக்கு அப்பால் இருந்த சிலர் உள்ளுராட்சிசபையை பெறுவதற்காகாக முயற்சித்தபோது அவர்களை கொழும்புக்கு அழைத்த மறைந்த அமைச்சர் மன்சூர், உள்நாட்டு அலுவல்கள அமைச்சின் ஒருகதவால் அழைத்துச்சென்று மறுகதவால் அழைத்து வந்த வராலாறு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இப்போதைய சூழலில் முஸ்லிம் காங்கிரசால் மட்டுமே சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபயை  பெறமுடியும் என்று தெரிவித்த றசீட், சுயட்சைக் குழுவை வெல்வதால் இலக்கை அடைந்துகொள்ள முடியாது என்றும் 40 தடவைகள் கொழும்புக்குச் சென்றதாகக் கூறும் மரைக்காயர் சபையினர், அந்த சந்திப்புக்களில் முன்னிலைப்படுத்தி அவர்களது உறவினர்களுக்குப் பெற்ற தொழில் வாய்ப்புக்களையும் மாறுதல்களையும் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

புனிதமான பள்ளிவாசல் நிருவாகத்தை முன்னேடுப்போர் உளச்சுத்தியுடன் செயட்படுகிரார்களா என தங்களை சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், பள்ளிவாசல் நிர்வாகத்தை ஜனநாயகமான முறையில் கலைத்து மக்களது நேரடியான கண்காணிப்பில் புதிய சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அந்த சபையில் துறை சார்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களின் ஊடாக பிரதேசம் மார்க்க ரீதியாகவும் அபிவிருத்தியும் அடைய வேண்டும் என்றும்  இப்போது உள்ள பிரச்சினைக்கு முழுப்பொறுப்பும் பள்ளிவாசல் நிர்வாகமே என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்களால் முஸ்லிம் காங்கிரசினால் களமிறக்கப்பட்டுள்ள ஆறு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டு பத்தாயிரத்துக்கு மேல் வாக்குகள் அளிக்கப்படுமானால் தான் முன்னின்று பிரதேச செயலகத்தைப் பெற்றதுபோல் உள்ளுராட்சிசபையையும் பெற்றுத்தருவேன் என்றும் வாக்குறுதியளித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த குறித்த வட்டாரத்தின் வேட்பாளர் நசார்டீன், உள்ளுராட்சிசபையை முஸ்லிம் காங்கிரஸ் தான் பெற்றுக்கொடுக்கும் என்றும் அதற்காக தாங்கள் பாரிய முன்னெடுப்புக்களை எடுத்துள்ளதாகவும் சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை முஸ்லிம் காங்கிரஸ் நிச்சயம் நிறைவேற்றும் என்றும் தெரிவித்தார்.

ஒருகாலத்தில் சமூக ஒற்றுமைக்காக மக்கள் வாக்களித்தபோது அதற்கு எதிராக வாக்களித்தவர்களையும்  முஸ்லிம்களைக் கொன்றவர்களையும் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்களையும் தங்களது நடு வீட்டுக்குள் வைத்திருந்தவர்களை பட்டியலில் போட்டுள்ள பள்ளிவாசலின் சுயட்சைக்குழுவை  மக்கள் எவ்வாறு ஆதரிப்பார் என்றும் கேள்வியெழுப்பினார்.

வருகின்ற காலம் நாட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறவுள்ள காலம் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பலமான கட்சியாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில்தான் சமூகத்தின் தேவைகளை அடைந்துகொள்ள முடியும் என்றும் எமது எதிர்கால சந்ததிக்காக நாங்கள் முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்தியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த வேட்பாளர் எம்.எம்.எம்.பாமி, சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை நோக்கிய  போராட்டத்தில் தாங்களும் கடந்த காலங்கில் இணைந்திருந்தவர்கள் என்றும் ஆரம்பகாலத்தில் அவர்களது போராட்டத்தில் நியாயங்கள் இருந்த போதிலும் காலப்போக்கில் வேறு சிலரின் அஜந்தாக்களுக்கு போராட்டம் திசைதிரும்பியதன் காரனமுமாகவுமே தான் சாய்ந்தமருதின் நன்மைக்காக முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் தேர்தலில் களமிறங்க தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.

பள்ளிவாசலால் களமிறக்கப்பட்டுள்ள சுயட்சைக்குழுவினர் ஜனநாயகத்தை மீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாகவும் பள்ளிவாசல் என்ற பதத்தைப் பயன்படுத்தி தாங்களது இலக்குகளை அடைய முனைவதாகவும் இவ்வாறான் செயற்பாடுகளில் இருந்து இவர்கள் தவிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சாய்ந்தமருது மக்கள் வெறும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடாது எதிர்கால சந்ததிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் என்றும் நாங்கள் சுயட்சைக்கு வாக்களித்து விட்டால் மட்டும் எங்களது மூன்று தசாப்தகால கோரிக்கையை அடைந்துகொள்ள முடியுமா? என்பதை நன்றாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கல்முனை மாநகரசபையை முஸ்லிம் காங்கிரஸ் அனுசரனையுடம் ஐக்கியதேசிய கட்சி கைப்பற்றும் எனத் தெரிவித்த பாமி, அந்த வெற்றியாளர்களில் ஒவ்வொருவரும் இணைந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

நிகழ்வில் கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர்களும் தற்போதைய வேட்பாளர்களுமான ஏ.ஏ.பஷீர் மற்றும் எம்.ஐ.எம். பிர்தௌஸ் வேட்பாளர் எம்.முபாறக் ஆகியோரும் உள்ளுராட்சிசபை என்ற இலக்கை  அடைந்து கொள்வதற்காகவும் பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்திக்காகவும் ஐக்கியதேசியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network