Jan 30, 2018

இத் தேர்தலின் மூலம் மு.காவின் அத்திவாரம் பலமாக இருக்கின்றது என்பதை நாங்கள் நிரூபிப்போம்

02-2


எமக்கெதிரான ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கான வியூகம் பிழைக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் அமோக வெற்றியைப் பெற்று, இறக்காமம் பிரதே சபையை அதிக வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை (28) மாலை வரிப்பத்தான்சேனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் மேலும் கூறியதாவது;

இறக்காமம், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் எங்களுடைய பூர்வீக காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. அவை அரச சொத்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இங்குள்ள ஓட்டுத் தொழிற்சாலைக்கு ஏராளமான காணி இருக்கின்றன. கரும்பு தொழிற்சாலை ஆயிரம் ஏக்கர் காணிகளை பிடித்திருக்கின்றன. இதில் எத்தனையோ பேர் நீதிமன்றத்தில் வழக்கு பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர்களை மீளப்பெற போகின்ற போராட்டத்தில் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.

இவற்றையெல்லாம் அடைந்து கொள்வதற்குரிய உபாயங்களை பற்றி நாங்கள் பாராளுமன்றத்தில் பேசுகின்றோம். இது சம்பந்தமாக நான்கு கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். அவர்கள் தங்களுடைய காணிகளில் வழமைபோல் விவசாயம் செய்வதற்கு விடுமாறு கடுமையாக பேசியிருக்கிறேன். இவ்விடயத்தில், அரசாங்க அதிபரும், ஒரு நிறுவனத்தின் பணிப்பாளரும் தடையாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து உங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்காக எங்களது கரங்களை மேலும் பலப்படுத்துங்கள். இதுதவிர, இந்த வருடத்தை அபிவிருத்தி யுகமாக மாற்றவேண்டும். இதற்காக வரவு, செலவுத் திட்டத்தில் கணிசமான தொகையை வரிப்பத்தான்சேனைக்கு ஒதுக்கியுள்ளோம். நீங்கள் கேட்பதையெல்லாம் செய்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபுடைய காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரம்தான் எங்களுக்கு சவாலாக இருந்த கட்சி. தலைவர் தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, இந்த மாவட்டத்தில் ஐ.தே.க. தேசியப்பட்டியலில் வந்தவர்களையும், அமைச்சர்களாக வந்தவர்களையும் எதிர்த்து நடாத்திய 6 வருட போராட்டம் இந்தக் கட்சியின் முக்கிய அத்திவாரம் என்பதை மறந்துவிடக்கூடாது.

இறக்காமம் மண்ணுக்கு வந்துகொண்டிருந்த போதுதான் தலைவருடைய அகால மரணம் நிகழ்ந்தது. பின்னர் நான் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, எங்களுக்கு ஒரே சவாலாக இருந்த ஐ.தே.க. பிரமுகர்களை எங்களது முஸ்லிம் காங்கிரஸ்காரர்களாக மாற்றினோம். மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் இந்த கட்சிக்கு பெரிய சவாலாக இருந்தவர். பின்னர் அவரும் இந்தக் கட்சியிலிருந்துதான் மரணிக்க நேர்ந்தது.

தலைவரின் மறைவின் பின்னர் இரட்டிப்பு பலத்துடன் நாங்கள் இருந்தோம். எங்களுடன் முட்டி மோதுவதற்கு ஐ.தே.க.யால் முடியவில்லை. சிலர் தங்களது மரணம்தான் எங்களை இந்தக் கட்சியிலிருந்து பிரிக்கும் என்றார்கள். அதில் கொஞ்சப் பேர் இப்போது மயில் கட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்.

இப்படியான நிலையில், நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கு தீர்மானம் எடுத்த நிலையில், அமைப்பாளர்கள் கூட போட்டியிடுவதற்கு வரவில்லை. அட்டாளைச்சேனையில் மாத்திரம் ஐ.தே.க. சார்பாக ஒருவர் முன்வந்துள்ளார். ஏனையபடி, எங்களது வேட்பாளர்களை, எங்களது விருப்பத்தின் பேரில்தான் ஐக்கிய தேசியக் கட்சியில் அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கியுள்ளோம்.

ரணில் எனக்கு யானையை விற்றுவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் சொல்கின்றனர். ஆனால், மயில் கட்சிக்காரர்கள் நான் மரத்தை ரணிலுக்கு விற்றுவிட்டதாக சொல்லிக்கொண்டு திரிகின்றனர். இப்படியானவர்கள் இங்கு கோழிகளை பங்குவைத்து வாக்கு சேகரிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்ற தோரணையில் சட்டவிரோத செயற்பாடுகளை செய்துவருகின்றனர்.

பெரிய வாக்கு வித்தியாசத்தில் இறக்காமம் பிரதேச சபையை நாங்கள் கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் இங்கு நடக்கின்ற இந்த அநியாயங்களை ஐ.தே.க. மூலமாக கட்டுப்படுத்த முடியும். எங்களுக்கு நடந்திருக்கின்ற அநியாயங்களுக்கு நீதியைப் பெறவேண்டும். இந்த நிலையில், எல்லாவற்றையும் பணம் வாங்லாம் என்று நினைக்கின்றனர். அப்படி சோரம்போன கூட்டமாக முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஒருபோதும் இருக்கமாட்டார்கள்.

இந்த தேர்தலில் இறக்காமம் பிரதேச சபையில் ஒவ்வொரு வட்டாரத்திலும் நாங்கள் அமோக வெற்றிகளை பெறுவோம். நாங்கள் எல்லோரும் எங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கான இந்த வியூகம் பிழைக்க முடியாது. அதை சாதித்துக் காட்டுவதன் மூலம் நாட்டின் தேசிய சக்திகளுக்கு முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் உண்மையான அத்திவாரம் பலமாக இருக்கின்றது என்பதை நாங்கள் நிரூபிக்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மற்றும் வேட்பாளர்கள் உட்பட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network