புத்தெழுச்சி பெறும் முஸ்லிம் காங்கிரஸ்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

புத்தெழுச்சி பெறும் முஸ்லிம் காங்கிரஸ்!

Share This


எம்.என்.எம்.யஸீர் அறபாத் கடந்த ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு இந்த ஆட்சி மாற்றத்தில் பங்களிப்புச்செய்த முஸ்லிம்களின் குரலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முன்னைய அரசாங்கத்தில் வழங்கப்படாத உரிய கௌரவம் இந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்டது. கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் செல்லப்பிள்ளைகளாக இருந்து தன்னைத்தானே தலைவராகப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள் சமூகப்பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணாது, முஸ்லிம் காங்கிரஸை ஓரங்கட்டுவதற்கும் தங்களின் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வதிலும் அதற்கான அரசியல் அதிகாரங்களைப் பெறுவதிலுமே கவனம் செலுத்தினார்கள். முஸ்லிம் காங்கிரஸ் கடந்த அரசாங்கத்தில் நீதியமைச்சைப் பெற்றிருந்தாலும், அதற்கான முழு அதிகாரமும் வழங்கப்படவில்லையென்பதுடன், அபிவிருத்திகளுக்கான நிதியொதுக்கீடுகளிலும் புறக்கணிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்ட பதவிக்காக கட்சி உருவாக்கியவர்கள் அபிவிருத்தி என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி மக்களின் மனங்களிலிருந்து முஸ்லிம் காங்கிரஸை அகற்றி விடலாமென்று கனவு கண்டார்கள். இவர்கள் முன்னெடுத்த அபிவிருத்திகளில் கொமிசன்களைப் பெற்றுக் கொண்டு, திட்டமிட்டு உரிய முறையில் அவைகளை முன்னெடுக்காது விட்டதன் விளைவாக குறுகிய காலத்தில் மழைக்கு கொங்ரீட் வீதிகள் கரைந்து சென்ற வரலாறும் பல பிரதேசங்களிலுண்டு. இவ்வாறான சூழ்நிலையில் தான் ஆட்சி மாற்றம் நடந்தது. அதன் பிற்பாடு முஸ்லிம் காங்கிரஸிற்கும், அதன் தலைமைக்கும் உரிய கௌரவம் வழங்கப்பட்டது. நகரத்திட்டமிடல்,நீர் வழங்கல் அமைச்சு தலைவருக்கும், விளையாட்டுப் பிரதியமைச்சும், சுகாதாரப் பிரதியமைச்சும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. அதே போல் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியதிகாரமும் முஸ்லிம் காங்கிரஸ் வசமானது. இவைகளின் பிற்பாடு இக்கட்சிக்கு வாக்களிப்பதால் கடந்த ஆட்சியில் அபிவிருத்தி, வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் குறிப்பாக, மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான தூய்மையான நீர் கிடைக்கும் போது, பாரிய நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அவ்வாறான தூய நீர் காணல் நீராக இருந்த பிரதேசங்களுக்கு அதன் முக்கியத்துவம் கருதி முன்னுரிமைப்படுத்தி இன, மத வேறுபாடுகளுக்கப்பால் தனது பணியை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் முன்னெடுத்தார்கள். அதே போல், நகரத்திட்டமிடல் அமைச்சினூடாக பல்வேறு பிரதேசங்களுக்கு நிதிகளை ஒதுக்கி பல அபிவிருத்திகளை முன்னெடுத்தார். கடந்த காலங்களை விடவும், கடந்த காலங்களில் சிலர் அபிவிருத்தி என்ற போர்வையில் செய்ததை விடவும் அதிகமாகவும் நேர்த்தியாகவும் குறுகிய காலப்பகுதியில் முன்னெடுத்தார். இவைகள் இவ்வாறிருக்கத் தக்கதாக இந்த பேரியக்கத்தை அழிக்கத் துடிக்கும் சக்திகளுடன் இந்த கட்சியிலிருந்து பதவி, பட்டங்களை அனுபவித்தவர்கள், எதிர்பார்த்தவர்கள் அவைகள் கிடைக்கப் பெறாது போகவே தலைமையை குற்றம் சொல்லி, கட்சியை விட்டு வெளியேறி எதிரிகளுடன் கைகோர்த்து இன்று கட்சிக்கும், தலைமைக்கும் எதிரான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

இவ்வாறானவர்கள் கட்சியிலிருந்து அனுபவித்ததும் அதன் பின் வெளியேறி இவர்களை இணைந்து கொண்ட நபர் அவரின் நடவடிக்கை தொடர்பாகவும் அவர்களின் நோக்கம் தொடர்பாகவும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இவர்களின் வெளியேற்றத்தினால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தற்போது தூய்மையடைந்து வருவதாக பார்க்கிறார்கள். இதன் காரணமாக மக்களின் அமோக ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் பெற்று வருவதை நாம் பார்க்கலாம்.
கடந்த காலங்களில் எதிர்ப்பு நிறைந்து காணப்பட்ட பிரதேசங்களில் அமோக வரவேற்பு காணப்படுவதை இன்றைய உள்ளூராட்சி மன்றத்தேர்தல் கூட்டங்களைப் பார்க்கும் போது தெளிவாகின்றது. இவ்வாறான கூட்டங்களைப்பார்த்த எதிரிகள் கூட ஆச்சரியப்படுகிறார்கள் எப்படி இவ்வளவு மக்கள் திரள் என்று.
இவைகள் எமக்கு உணர்த்துவது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை யாரும் மடையர்காக மாற்ற முடியாதென்பதுடன், இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் கட்சிகள், தலைமைத்துவங்களை கடந்த காலச் செயற்பாடுகள் போன்ற விடயங்களில் ஒப்பீடு செய்து பார்க்கும் போது, முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையுமே சிறந்த தெரிவாகக் காணப்படுகிறது.

எனவே தான் மக்கள் அதனைப் பலப்படுத்த முன்வருகிறார்கள். இவ்வாறான பல்வேறு காரணங்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தெழுச்சியடைந்து வருகிறது.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE