சாய்ந்தமருது மக்களின் போராட்டமும், கற்றுத்தந்த பாடங்களும், மு.கா புனரமைப்பு செய்யப்பட வேண்டிய அவசியமும். - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

சாய்ந்தமருது மக்களின் போராட்டமும், கற்றுத்தந்த பாடங்களும், மு.கா புனரமைப்பு செய்யப்பட வேண்டிய அவசியமும்.

Share This


இந்நாட்டு முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்படுகின்ற சூழ்நிலைகள் கூர்மையடைந்தால், அரசியல்வாதிகளை நம்பியிராமல் தங்களது உரிமைக்காக களத்தில் இறங்கி ஆயுதபோராட்டம் நடாத்துவதற்குரிய ஆற்றல் முஸ்லிம்களுக்கு உள்ளது என்ற செய்தியை சாய்ந்தமருது மக்களின் போராட்டம் கூறியுள்ளது.   

சாய்ந்தமருதில் உள்ளூராட்சி மன்றத்துக்கான கோரிக்கைகள் ஆரம்பகாலங்களில் படிப்படியாக வலுவடைந்தபோது அதன் பாரதூரத்தை இவ்வூரின் இன்றைய மற்றும் அன்றைய மு.கா பிரமுகர்களால் புரிந்துகொள்ள தவறியமையின் பிரதிபலிப்புத்தான் இந்த தேர்தல் பெறுபேறுகளாகும். 

சாய்ந்தமருது மக்களில் தொண்ணூறு வீதமானோர் மு.காங்கிரசுக்கே வாக்களித்து வந்தார்கள். மாற்று கட்சிகள் சார்பாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாத ஒரேயொரு ஊராகவும் இது இருந்தது. ஆனால் அதே தொண்ணூறு வீதமானவர்கள் இம்முறை தங்களது கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். 

அன்று சாய்ந்தமருது மக்களால் வழங்கப்பட்ட வாக்குகளை உள்ளூரில் உள்ள சில பிரமுகர்கள் தங்களை அரசியலில் வளர்த்துக்கொள்ள பயன்படுத்தினார்களே தவிர, மக்களின் வாக்குகள் ஓர் அமானிதம் என்றும், அதை மக்களுக்காக பயன்படுத்த வேண்டுமென்றும் செயல்படவில்லை. 

அதுமட்டுமல்லாமல் ஒலுவில் போன்ற சிறிய கிராமங்களில் இருக்கின்ற மு.கா பிரமுகர்களின் எண்ணிக்கையிலாவது பத்தொன்பது ஆயிரம் வாக்காளர்களை கொண்ட சாய்ந்தமருதில் பிரமுகர்கள் உருவாகவில்லை. அவ்வாறு யாராவது அரசியலில் உருவானால் அவர்கள் கழுத்தறுப்பு செய்யப்பட்டு அவர்கள் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டு விடுவார்கள்.

சாய்ந்தமருது மக்கள் மு.கா என்னும் அரசியல் கட்சியை மட்டும் ஆதரித்ததனால் பணம் படைத்தவர்கள், கல்விமான்கள் மற்றும் அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் எவருக்கும் அரசியல் செய்வதற்கு மு. காங்கிரசை விட்டால் வேறு பாதைகள் இருக்கவில்லை. 

ஆனால் இவ்வாறானவர்களை கட்சியினுள் சேர்ப்பதற்கு உள்ளூர் பிரமுகர்களினால் கதவடைப்பு செய்யப்பட்டிருந்தது. தங்களது இடம் பறிபோவதோடு, எதிர்கால சுயநல அரசியலுக்கு அவர்களின் வருகை தடையாக அமைந்துவிடும் என்ற அச்சமும், பொறாமையுமே அதற்கு காரணமாகும். 

புதியவர்களை கட்சியினுள் சேர்ப்பதனை தடுப்பதற்கு இவர்கள் கையாளும் தந்திரம்தான் பழமைவாதம். அதாவது தாங்கள் கட்சிக்காக பத்திரிக்கை வித்தது என்றும், இந்தியபடை துரத்தியபோது ஓடியது என்றெல்லாம் புராணக்கதைகளை கூரிக்கூறியே புதியவர்களை மட்டம்தட்டுவது இவர்களது தந்திரோபாயமாகும்.  

அவ்வாறு மு.காங்கிரசிலிருந்து வெளியேற்ற பட்டவர்களையும், அரசியல் உரிமை மறுக்கப்பட்டவர்களையும், கட்சியில் இடம் கிடைக்காதவர்களையும் இன்றய சாய்ந்தமருது போராட்ட களத்தினை வழிநடாத்தியதனை காணக்கூடியதாக இருந்தது. 

இன்று சாய்ந்தமருதில் மு.காங்கிரசுக்கு கிடைத்துள்ள பின்னடைவானது பல செய்திகளை கூறினாலும், சாய்ந்தமருது கட்சியின் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை செய்யவேண்டும் என்ற செய்தியையும் தெளிவாக கூறியுள்ளது.    

இன்று எத்தனையோ இளைஞ்சர்களும், சுயநலமற்றவர்களும் மு.காங்கிரசை ஆதரிப்பதற்கும், அதனை கட்டிக்காத்து வழி நடாத்துவதற்கும் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் அதற்கு தடையாக இருப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகளாகும். 

எனவே இந்த அதிகாரிகளின் பதவிகள் களையப்பட்டு புதியவர்கள் உள்வாங்கப்பட்டு கட்சியை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இன்றைய தற்காலிக பின்னடைவானது நிரந்தரமானதாகிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE