Mar 2, 2018

இலங்கையின் கூட்டுறவு சொத்துக்களின் பெறுமதி 03 பில்லியன் ரூபாயினை அண்மித்துள்ளது’ அமைச்சர் ரிஷாட்இலங்கை கூட்டுறவு சங்கத்தின் அடிப்படை சொத்தின் பெறுமதி ஏறத்தாள 03 பில்லியனாக அதிகரித்துள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்ச்சியாக உதவி பெறுகின்றவைகளாக இல்லாமல், அவைகளும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தில் போட்டியிட முன்வர வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

கொழும்பு, கலதாரி ஹோட்டலில் சர்வதேச கூட்டுறவு அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆசிய பசுபிக் கூட்டுறவு அபிவிருத்தி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டுறவு அமைப்புக்கள் தொடர்ச்சியாக உதவியினைப் பெறும் நோக்கில் செயற்படாமல், சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தில் உள்ள ஏனைய நிறுவனங்களோடு போட்டியிடுவது மிகவும் முக்கியமானதாகும். கூட்டுறவுச் சங்கங்கள் அவைகளது பணிகளையும், சேவைகளையும், விற்பனை செய்வதற்குத் தேவையான தந்திரோபாயத் திட்டங்களையும் வடிவமைத்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என மேலும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெறுகின்ற முதலாவது சர்வதேச கூட்டுறவு அமைப்பின் மாநாடு இதுவாகும். இம்மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பாலு ஐயர், சர்வதேச கூட்டுறவு அமைப்பின் கிர்கிஸ் குடியரசின் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் டினயர் எனா நேலியர், தேசிய கூட்டுறவு சபையின் தலைவர் லலித்     ஏ.பீரிஸ் உட்பட 27 நாடுகளிலிருந்து வருகை தந்த கூட்டுறவுப் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு பெப்ரவரி 28 ஆம் திகதி நிறைவடைந்தது. குறிப்பாக கூட்டுறவு முறைக்கு நிலைபேரான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வது தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 

இந்த மிகப்பெரிய சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு அமைப்பின் ஊடாக (ICA) நிலைபேரான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு பூகோள அல்லது உலகளாவிய கூட்டுறவு இயக்கமும் பல வழிமுறைகளையும், திட்டங்களையும் கண்டுபிடிக்கக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய போது கூறியதாவது,

நிலைபேரான அபிவிருத்தி இலக்குகளை அடைய அரசும் கூட்டுறவு இயக்கங்களும் ஒன்றாக செயற்பட்டு, திட்டங்களை வரைந்து அவற்றினை மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும். நான் இங்கு அழுத்திக் கூற விரும்புவதாவது, அமைச்சர்களின் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகள் மற்றும் எட்டப்பட்ட தீர்மானங்கள் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இத் தீர்மானங்களினை நடமுறைப்படுத்துவதற்குத் தேவையான வேலைகள் இடம்பெற்றும் வருகின்றன.

உங்கள் அனைவருக்கும் தெரிந்தது போல் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கங்கள் மிகக் கடுமையான போட்டித் தன்மையினை, ஏனைய நிறுவனங்களோடு மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சந்தையின் தன்மை மற்றும் போட்டித் தன்மை என்பனவற்றை கவனத்திற்கொண்டு பொருட்களையும், சேவைகளையும் எவ்வாறு விற்பனை செய்ய முடியும் என்பதற்கான மிகச்சரியான தந்திரோபாயத் திட்டத்தினை உருவாக்க வேண்டியது கூட்டுறவு இயக்கங்களினது பொறுப்பாகும்.

தற்பொழுது திறந்த சந்தையில், தோன்றுகின்ற வர்த்தக ரீதியான சவால்களை எதிர்கொள்ளக் கூடிய சக்தி கூட்டுறவு இயக்கங்களிடம் உண்டு. அதற்கு எமது நாட்டின் கூட்டுறவுத் துறை மிகச் சிறந்த உதாரணமாகும். ஏனெனில், எமது நாட்டில் கூட்டுறவு என்பது ஏறத்தாள 112 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது என்று அமைச்சர் கூறினார். 


-ஊடகப்பிரிவு-
SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network