Mar 23, 2018

மக்கள் காங்கிரஸ் புதிய பாதையில் பயணிக்க திடசங்கற்பம் - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

‘யாப்புக்களை தமது வசதிக்கேற்ப திருத்தும் அரசியல் கலாசாரத்துக்கு மாற்றமாக  மக்கள் காங்கிரஸ் புதிய பாதையில் பயணிக்க திடசங்கற்பம்’
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு! 

கடந்த காலத் தலைவர்கள் எந்த நோக்கத்துக்காக தமது கட்சிகளை உருவாக்கினார்களோ, அவர்களின் மறைவுக்குப் பின்னர், அந்தக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் அவற்றினது யாப்புக்களையும், கொள்கைகளையும் தமக்கு வசதியாகவும், ஏற்றார் போலவும் மாற்றியமைத்து அரசியல் செய்து வருகின்றனர். அவ்வாறான நடைமுறைகளைப் போலன்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் நலனை மையமாகக் கொண்ட புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை அறிமுகப்படுத்தி, பயணித்து வருவதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று மலை (22) கொழும்பில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தலைமைத்துவ சபை ஒன்றை கொண்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி மாவட்டக் குழு, மத்திய குழு என்ற பல்வேறு கட்டமைப்புக்களை வகுத்து, மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து செயற்படும் ஒரு கட்சியாக பரிணமிக்கும் வகையில் இதன் யாப்பை வடிவமைத்துள்ளோம்.

அரசியல் என்பது சாக்கடை என்றும், அது ஒரு வியாபாரம் என்றும் கூறப்படுவதை நாம் மாற்றியமைத்து, அதனை ஒரு புனிதப் பயணமாகக் கருத வேண்டும்.  இறைவன் எல்லோருக்கும் இந்த வாய்ப்பை தருவதில்லை. அரசியல்வாதி தமது கடமையை சரிவரச் செய்வதன் மூலமே இறை தீர்ப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

பணத்தின் மூலம் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க முடியும் என்ற அரசியல் கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஒரிருவருடன் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சியானது இன்று பெருவிருட்சமாக வளர்ந்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரையும் அரவணைத்து, அரசியல் செய்து வருகின்றது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மூவினத்தையும் சேர்ந்த பெருவாரியானவர்களை உள்ளூராட்சி சபைகளில் எமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகளாக்கி சாதனை படைத்துள்ளோம். மிகக் குறுகிய காலத்தில் எல்லா மதத்தினரையும், இனத்தவரையும் உள்வாங்கிய கட்சியாக இது உருவெடுத்துள்ளது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மன்னார், மாந்தை மேற்குப் பிரதேச சபையில் 13 வட்டாரங்களில் எமது கட்சி, 11 வட்டாரங்களில் வெற்றிபெற்றமையை நான் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இதற்கு முன்னர் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், எமது கட்சியின் சார்பாக 10 தமிழ் வேட்பாளர்களும், 04 முஸ்லிம் வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டு அதில் ஆக, 04  முஸ்லிம் வேட்பாளர்களை மாத்திரம் வெற்றிபெற்றனர். அங்குள்ள எமது கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் இதனை ஒரு சவாலாக எடுத்து இம்முறை அந்தநிலையை மாற்றியமைத்துள்ளனர். அதாவது இம்முறை 13 வட்டாரங்களில், 11 வட்டாரங்களில் நாம் வெற்றிபெற்றுள்ளோம். பெரும்பாலான தமிழர்களே எமது கட்சியின் சார்பில் வெற்றிபெற்றுள்ளனர். 

அது மாத்திரமின்றி மாந்தை மேற்கு பிரதேச சபையில் விடத்தல்தீவில் வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர் ஒருவர், அதே ஊரைச் சேர்ந்த கத்தோலிக்க வேட்பாளர் ஒருவருக்கு, தனது ஆசனத்தை விட்டுக்கொடுத்து தலைமையின் கௌரவத்தையும், கட்சியின் நன்மதிப்பையும், சமுதாயத்தின் நன்மையையும் வெளிப்படுத்தியிருப்பது எங்களால் மறக்க முடியாத ஒன்றாகும். அது மாத்திரமின்றி இந்தப் பிரதேச சபையில்  இன ஒற்றுமையையும் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

வாக்குப் பிச்சைக் கேட்டுத்தான் அரசியல்வாதி அதிகாரத்தைப் பெறுகின்றான். அதை மனதில் இருத்தி நாம் செயற்பட வேண்டும். எதையாவது அடைய விரும்புபவர்கள் அல்லது சாதிக்க விரும்புபவர்கள் நம்முடன் நெருங்கி இருப்பவர்களைப் பற்றி பிழையாகவும், பொய்யாகவும் இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறி நம்மை திசை திருப்பப் பார்ப்பார்கள். அதை நம்பி பிழையான முடிவுகளை நாம் மேற்கொள்ளக் கூடாது. நமக்குக் கிடைத்த அமானிதத்தை நாம் சரிவர நிறைவேற்ற வேண்டும்.

வாக்களித்த மக்களை எப்போதும் கௌரவத்துடன் பார்க்கும் நிலை நம்மிடம் இருக்குமேயானால், எமது அரசியல் பயணம் சரியான பாதையில் நீடித்து நிலைக்கும். நமது செயற்பாடுகள் சீராக இருந்தால்தான் இருக்கின்ற செல்வாக்கை சரிய விடாமல், இன்னும் பன்மடங்காக அதிகரிக்க முடியும்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது கட்சியைப் பொறுத்தவரையில், கண்டி மாவட்டத்தை ஒரு முன்மாதிரியான மாவட்டமாக நாம் கருதுகின்றோம். நாம் ஆட்சியமைக்கும் உள்ளூராட்சி சபைகளில் எதிர்வரும் 04 வருடங்களில் திட்டமிட்டு செயலாற்ற எண்ணியுள்ளோம்.
எனவே, மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற நீங்கள் இதய சுத்தியுடன் செயற்படுவது போன்று, மக்கள்மயப்படுத்தப்பட்ட தலைவர்களாகவும் மிளிர வேண்டும்.

ஆகையால், கிடைத்த சந்தர்ப்பத்தை பாலாக்கி விடாதீர்கள். உள்ளூர் தலைமைகளின் ஆலோசனைகளைப் பெற்று, பெரியவர்களை மதித்து, தேவை உள்ளவர்களை அனுசரித்து இந்தப் புனிதப் பணியை மேற்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருங்கள் என்று கூறினார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரீ.ஹசன் அலி, மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், இல்ஹாம் மரைக்கார் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சிகளை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ் நெறிப்படுத்தினார். அமைச்சரின் பாராளுமன்ற செயலாளரும், சிரேஷ்ட அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி பதவிப்பிரமாண உறுதி மொழிகளை எடுத்தியம்பினார்.

மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், நவவி எம்.பி, பிரதித் தலைவர் சஹீட், பொருளாளர் ஹுசைன் பைலா உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.           

           
 -சுஐப் எம்.காசிம்- 


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network