சிறார்கள் வாகனம் செலுத்துவதன் ஆபத்து - கொஞ்சம் வாசியுங்கள்


அக்குறணையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதான ஆசிப் எனும் இளைஞர் உயிரிழந்தார். இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் தனியார் பஸ் வண்டி ஒன்றில் மோதுண்டு ஏற்பட்ட விபத்திலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது.
அதேபோன்று கொழும்பு, தெஹிவளையில் கடந்த ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுதுவிட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு சிறார்கள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் இரு இளைஞர்கள் பெருநாளைக்கு ஆடை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் ஆபத்தான நிலையில் இன்றும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயர்­தர வகுப்பில் கல்வி கற்­று­வரும் கல்­கி­சை­யைச் ­சேர்ந்த அமான்  கிச்சில் என்ற 18 வயது  மாணவன் உயி­ரி­ழந்­த­துடன் வாக­னத்தில் இருந்த 9 மாணவர்கள் காய­ம­டைந்­த சம்பவம் எமக்கு நினைவிருக்கலாம்.  சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தைச் செலுத்திய பாடசாலை மாணவனிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என பொலிஸார் அச் சமயம் தெரிவித்திருந்தனர்.
சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குரிய வயதை அடையாத அல்லது பாரிய வாகனங்களைச் செலுத்துவதற்கான முதிர்ச்சியைக் கொண்டிராத தமது பிள்ளைகளுக்கு பெற்றோர் வாகனங்களைச் செலுத்த அனுமதியளிப்பதனால் ஏற்படுகின்ற விளைவுகளுக்கு இவ்வாறான சம்பவங்கள் நல்ல உதாரணமாகும்.
எனவேதான் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் போக்குவரத்துச் சட்டங்கள் மேலும் இறுக்கமாக்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் சிறுவர்கள் வாகனம் செலுத்துவது தொடர்பில் அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கான சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் அதிகபட்ச அபராதம், மூன்று முறைக்கு மேல் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தீவிர குற்றமிழைத்தால் 2 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை இரத்துச் செய்தல் ஆகிய பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் இலங்கையிலும் அவ்வாறான இறுக்கமான விதிகள் அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் கடும் எதிர்ப்புகள் காரணமாக அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் நாட்டில் அதிகரிக்கும் விபத்துக்கள் மேற்படி இறுக்கமான விதிமுறைகள் அவசியம் என்பதையே மீளவும் வலியுறுத்தி நிற்கின்றன

நன்றி விடிவெள்ளி
சிறார்கள் வாகனம் செலுத்துவதன் ஆபத்து - கொஞ்சம் வாசியுங்கள் சிறார்கள் வாகனம் செலுத்துவதன் ஆபத்து - கொஞ்சம் வாசியுங்கள் Reviewed by NEWS on June 25, 2018 Rating: 5