Jun 14, 2018

தமிழர் பிரதேசங்களை தமிழர் ஆள்வது அவசியம் முன்னாள் அமைச்சர் துரைராஜசிங்கம்எமது முன்னோர்கள் இந்தப் பிரதேசத்தை காப்பாற்றித் தந்திருக்கின்றார்கள். அவர்கள் அலட்சியமாக அரசாங்க கட்சிகளுக்கு வால்ப்பிடித்திருந்தால் இலங்கையில் பல தமிழ் பிரதேசங்களை இழந்தாற் போல் வடக்கு கிழக்கையும் இழந்திருப்போம்.
நாம் மிகக் கவனமாக இல்லாவிட்டால் எமக்குத் தெரியாமலேயே எமது சமுதாயம் அழிந்து விடும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உபதவிசாளர்
கா.இராமச்சந்திரனின் முயற்சியால் வந்தாறுமூலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று மக்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் – எமது தமிழ்ப் பிரதேசங்களில் பேரினவாதக் கட்சிகள் பொறுப்புகளை எடுத்துக் கொண்டால் அதன் பலாபலன்கள் என்ன என்பது நமக்குத் தெரியாதது அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தை மாவடிவேம்பில் நடத்துகின்ற அளவிற்கு நிலைமை வந்திருக்கின்றது என்றால் அது தமிழ் மக்கள் பெருமையடையக் கூடிய விடயம் அல்ல. எதிர்காலத்தில் நாங்கள் இன்னும் அதிகமாக தமிழ் உணர்வோடு செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
நாங்கள் தமிழர்களாக வாந்தால் மட்டுமே அல்லது எமது பிரதேசத்தில் தமிழ் கட்சி ஆட்சிப் பொறுப்பை எடுத்தால் மட்டுமே எமது இனம், மதம், இடங்கள் என்பன காப்பாற்றப்படும். எமது முன்னோர்கள் இந்தப் பிரதேசத்தை அந்த வகையில் காப்பாற்றித் தந்திருக்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் அலட்சியமாக அரசாங்க கட்சிகளுக்கு வால்ப்பிடித்திருந்தால் இலங்கையில் பல தமிழ் பிரதேசங்களை இழந்தாற் போல் வடக்கு கிழக்கையும் இழந்திருப்போம். நாம் மிகக் கவனமாக இல்லாவிட்டால் எமக்குத் தெரியாமலேயே எமது சமுதாயம் அழிந்து விடும்.
தமிழனாக நாங்கள் வாழ வேண்டும் என்பதில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். தமிழனாக நாங்கள் வாழ வேண்டும் என்றால் தமிழ்க் கட்சிக்குத் தான் நாங்கள் ஆதரவளிக்க வேண்டும். தமிழர்களின் பிரச்சினையை பாராளுமன்றில் எடுத்துச் சொல்லுகின்ற ஒரே ஒரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான்.
இன்னும் தமிழ்க் கட்சிகள் இருக்கின்றது தானே என மக்கள் சிந்திக்கலாம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் முதலமைச்சராக வந்தபோது மஹிந்தவின் கட்சியான வெற்றிலையில் தான் தேர்தல் கேட்டார். மஹிந்த என்பவர் யார் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். மஹிந்தவே பிள்ளையானை முதலமைச்சர் ஆக்கினார்.
அவரை ஏன் முதலமைச்சர் ஆக்கினார். தமிழர் ஒருவரை முதலமைச்சராக்கியிருக்கின்றோம் என்று உலகத்திற்கு காட்டுவதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகமே அது. இராவணனை காட்டிக் கொடுத்த விபீஷனனுக்கு முடிசூட்டிய இராமன். இலங்கையை அழிப்பதற்கு துணை நின்றமையால் அந்தப் பரிசு விபீஷனனுக்குக் கிடைத்தது. அது போல தமிழ் மக்களை அழிப்பதற்கு துணை நின்றமைக்கான ஒரு பரிசாகவே முதலமைச்சர் பதவி பிள்ளையானுக்குக் கொடுக்கப் பட்டது.
அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விடயங்களை எதிர்த்துக் கதைக்க முடியாது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தான் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களுக்கு எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி தமிழ் மக்களைத் தமிழ் மக்களாகக் காப்பாற்றி வருகின்றது.
ஆக மூத்த இனமாக இருக்கின்றோம். எமது முன்னோர்கள் எல்லாம் எமது மொழியின் பால் கொண்ட பற்றின் காரணமாகத்தான் நாங்கள் பழம்பெரும் இனத்தவர் என்ற பெருமையோடு இருக்கின்றோம்.
அரசியல் தான் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற விடயம். எமது வாக்குப் பலத்தில் நாங்கள் கவனயீனமாக இருந்தால் அது எமது கழுத்தை நெரித்துவிடும். எனவே அந்த விடயத்தில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
எமது பொருளாதாரத்தை நாங்கள் வளப்படுத்த வேண்டும். இது அரசாங்கத்திடம் தான் இருக்கின்றது. குளத்தில் இருக்கும் நீர் நேரடியாக எமக்குக் கிடைக்காது அதற்கான வாய்க்கால் அமைக்க வேண்டும். அதே போன்று அரசில் எம்முடைய உணர்வுள்ளவர்கள் இருக்க வேண்டும். அரசாங்கம் தருவதை எடுப்பவர்கள் அல்ல. மக்களுக்கு என்ன தேவையோ அதனை கேட்டுப் பெற்றுவரக் கூடியவர்கள் இருக்கவேண்டும். அந்த வகையில் அரசியற் பலத்தை நாங்கள் கட்டிக் காத்திட வேண்டும்
முஸ்லிம்கள் எல்லாவகையிலும் முன்னேருகின்றார்கள் என்று சொல்லுகின்றார்கள். அவர்களுக்கு ஒரு அரசியற் பலம் இருக்கின்றது. நாங்கள் வருகின்ற அரசாங்கங்களுடன் எல்லாம் சேர்ந்திருக்க முடியாது. எமது அரசியல் கொள்கை சார்ந்த அரசியல்.
எமது இனம், மொழி, மண் என்பவற்றைக் காப்பற்ற வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. இதற்கு ஏற்ற விதத்தில் தான் நாங்கள் மத்திய அரசோடு செயற்பட முடியும். பலாப்பழம் வெட்டும் போது பயன்படுத்தும் நுட்பத்தைத் தான் கையாள வேண்டும்.
குறித்த சிங்கள அரசுடன் சேர்ந்து வேலை செய்யும் போது குறித்த சிங்கள சக்தி எங்களுக்குள் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்கின்ற உத்தியை நாங்கள் கையாளவேண்டும்.
எனவே தான் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கின்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்ற போது எங்களுடைய தமிழ் உணர்வுகளை முன்நிறுத்தி செயற்டுகின்ற அரசியல் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல். ஏனைய அரசியலாளர்கள் அப்படியே சென்று சங்கமமாகி விடுவார்கள். எனவே எல்லா நேரத்திலும் தமிழ் உணர்வு, இன உணர்வு, இடம் சார்ந்த உணர்வோடு செயற்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாங்கள் ஆதரிக்க வேண்டும்.
நாம் தமிழர் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டும். அவ்வாறு நாங்கள் தமிழராக வாழ்வதற்கு எமக்குப் பலத்தைத் தருகின்ற தமிழ் அரசியலை நாங்கள் பேணிப் பாதுகாக்க வேண்டும். அந்தத் தமிழ் அரசியலின் தலைமையைப் பலப்படுத்த வேண் டும் என்று தெரிவித்தார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network