முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபாரிசுக் குழுவில் ஷரீஆ சட்டத்துக்கு உட்பட்டதாகவே எமது சிபாரிசுகளை முன்வைத்தோம். அந்த அடிப்படையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எமது கருத்துகள் ஷரீஆவுக்கு முரணாக அமையவில்லை. ஒன்பது வருடங்களாக இடம்பெற்று தயாரிக்கப்பட்ட அறிக்கை மீண்டும் கலந்துரையாட வேண்டிய தேவையில்லை.
இதை சட்டமூலமாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபாரிசு குழுவின் உறுப்பினரும் பெண்கள், அமைப்பின் பிரதிநிதியுமான சட்டத்தரணி சபானா குல் பேகம் தெரிவித்தார்.
நேற்று மாலை கொழும்பிலுள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் (WERC) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
"கடந்த 8 வருடங்களாக இந்தக் குழுவில் கடமையாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. காதி நீதிமன்றங்களிலிருந்து மேன்முறையீட்டுக்கு வரும் வழக்குகளில் நான் ஆஜராகிய அனுபவமுண்டு.
2018 ஆம் ஆண்டுவரை சுமார் எட்டு வருடங்களாக பல சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி அறிக்கையை கடந்த ஜனவரி மாதம் நீதியமைச்சரிடம் கையளித்தோம். இந்த அறிக்கையில் ஒரு சில விடயங்களில் மாத்திரம் வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன.
நாம் அதிகமானோரோடு மற்றும் உலமாக்கள், இஸ்லாமிய தத்துவவியலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். இஸ்லாமிய நாடுகளின் சட்டங்களை, இஸ்லாமிய நூல்களைப் படித்தே இந்த அறிக்கையைத் தயாரித்தோம். துரதிஷ்டவசமாகவே சில வித்தியாசமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாம் முன்வைத்த கருத்துகள் எவையாக இருந்தாலும் நாம் ஷரீஆவுக்கு முரணாக செல்லவில்லை.
அறிக்கையிலுள்ள சிபாரிசுகள் அனைத்தும் ஷரீஆவுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளன. நாட்டில் சட்டங்கள் மக்களுக்கு தீர்வு நிவாரணம் வழங்கக் கூடியதாகவே அமையவேண்டும். எமது சிபாரிசுகள் ஷரீஆவுக்கு உட்பட்டனவே.
கடந்த 19 ஆம் திகதி குழுவின் தலைவர் சலீம் மர்சூப் எமது அறிக்கையின் விளக்கங்களை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். அறிக்கையின் இரு கருத்துகளையும் விளக்கியுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பத்வா குழுவுடன் நாங்கள் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளோம். இந்த அறிக்கையை தயாரிப்பதற்கு முன்பு இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம் பலமுறை பத்வா குழுவைச் சந்தித்துள்ளோம். அப்படியிருக்கும்போது ஏன் மீண்டுமொரு சந்திப்பு.
9 வருடங்களுக்கு முற்பட்ட காலத்துக்கு நாம் மீண்டும் செல்லவேண்டுமா என்ற கேள்வி இங்கு எழுகிறது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது இதனை சட்டமாக்குவது, சட்டமூலமாக்குவது, விவாதிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சட்ட வரைபு திணைக்களத்துக்கு அனுப்புவது என்பது தான் மீதமாக இருக்கிறது. இந்நிலையில் உலமா சபையுடன் மீண்டும் ஏன் இந்தக் கூட்டம் என்பது கேள்வியாக இருக்கிறது.
உலமா சபை கலந்துகொள்ளும் கூட்டத்துக்கு முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளலாம் என்றால், பெண்களும் கலந்துகொள்ளமுடியாதா என்ற கேள்வி எழுகிறது. பெண்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை என்றார்.
நிகழ்வில் ஜுவைரியா முகைதீன், சட்டத்தரணி எரிமிசா டிகல், சட்டத்தரணி ஹசனா சேகு இஸ்ஸதீன், நஸ்ருதீன் ரம்ஸியா ஆகியோர் உரையாற்றினர்.