பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் உண்மையான பெருமிதம் எது?

(By: Sameen Mohamed Saheeth - Nintavur) பெற்றோர்களின் பெருமிதம் பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் வளர்த்து இருக்கின்றோம் என்பதில் அல்ல எந்த கஷ்டங்களையும் கடந்து செல்லும் அளவு வளர்த்திருக்கின்றோம் ஏன்பதில்தான உள்ளது. பிள்ளைகளை வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்ப்பதை தவிர்ந்து கொள்ளுங்கள் சமூகத்துடன் கலந்து நல்லது கெட்டதுகளை தெரிந்து கொள்ள வாய்ப்பளியுங்கள். எனது பிள்ளை மண்ணுக்குள் விளையாடுவது இல்லை, மரக்கறி சாப்பிடுவது இல்லை, வெளியில் செல்வது இல்லை, Smart phone இல் அவனாகவே Game download செய்து விளையாடுகிறான் என்பதெல்லாம் உண்மையான பெருமிதம் இல்லை, அக்கம் பக்கம் நாலு பேருடன் விளையாடுகிறான் என்பதே நலவு என்பதை புரிந்து கொள்ளுங்கள். பிள்ளைகள் வெளியில் செல்வதை தவிர்க்க Smart phone களையும், TV க்களையும் பயன்படுத்தாதீர்கள், அவர்களுடன் சேர்ந்து உண்மையான உலகை அவர்களுக்கு காட்டுங்கள். நம்மிடம் இருக்கின்றது தானே என்பதற்காக கேட்கின்ற எல்லாவற்றையும் உடனே கொடுக்காதீர்கள், தேவையான ஒன்று கிடைக்காத போது அவர்களின் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள பழக்குங்கள். சிறு இழப்புக்களின் போதும் சோர்ந்து போகும் அளவுக்கு பழக்கப்படுத்தி விடாதீர்கள். இந்த உலகம் 100% நல்ல மனிதர்களையும் கரடுமுரடற்ற நேரான பாதையையும் கொண்டது அல்ல 80% சுயநலவாதிகளையும் கரடுமுரடான பாதைகளையும் கொண்டது என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். பிள்ளைகளை சக பிள்ளைகளுடன் விளையாட அனுமதியுங்கள் வெற்றி தோல்விகளை அனுபவித்து புரிந்து கொள்ள இடமளியுங்கள். மாதக்கணக்கில் கற்பிக்கப்படும் பாடபுத்தகங்கள் கற்றுத்தரும் அனுபவங்களை விட ஒரு நாள் விளையாட்டின் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் வாழ்க்கைக்கு சிறந்தவை என்பதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ளுங்கள். கல்வியின் மூலம் தராதரத்தில் (Status) மாற்றத்தை ஏற்படுத்தலாம் ஆனால் அதனால் மனப்பாங்குகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. பிள்ளைகளின் மன வலிமையை செப்பனிடுவது பெற்றோர்களின் புரிதலிலேயே புதைந்துள்ளது. இதன் மூலம் மட்டுமே பிள்ளைகளை பிரச்சனைகளின் போது பிழையான முடிவுகளை எடுப்பதில் இருந்து வெளிக் கொண்டு வர முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...