மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் எந்தவொரு சமூகத்துக்கும் அநீதியாக செய்யப்படவில்லை. சட்டவரம்புகளுக்கு உட்பட்டே எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதெனக் கருதினால் தவறுகளை மீளாய்வு குழுவுக்கு சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளலாம் என மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி கே.தவலிங்கம் ‘விடிவெள்ளி’ க்குத் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குற்றம் சுமத்துவது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“எந்தவொரு சமூகம் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென சுட்டிக் காட்டினால் எல்லை நிர்ணயம் தொடர்பான மீளாய்வுக்குழு அது தொடர்பில் ஆராய்ந்து விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயத்தின் போது சட்டவரம்புகள் பேணப்பட்டுள்ளன.
சில பிரதேசங்களில் பாரிய நிலப்பரப்பில் முஸ்லிம்கள் இடைக்கிடை பரந்து வாழ்வதால் சனபரம்பல் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்வதில் சிக்கல்கள் உருவாகின.
மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் மற்றும் உரிய எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக மீளாய்வு செய்வதற்கு மீளாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் என்னையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவையும் நியமித்திருக்கிறார்கள்.
ஆனால், இக்குழுவில் எங்களின் கடமைகள் என்ன? நாங்கள் என்ன பணிகளைச் செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. நியமனம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்குழுவில் எமது பொறுப்புக்கள் என்ன என்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சபாநாயகரிடம் சந்திப்பொன்றினைக் கோரியுள்ளோம். இது தொடர்பில் சபாநாயகருக்கு நானும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளோம். மீளாய்வுக்குழுவில் எமது கடமைகள் என்னவென்று அறிந்து கொண்டாலே அது தொடர்பாக செயற்படமுடியும் என்றார்.
மீளாய்வுக்குழுவின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் அங்கத்தவர்களாக சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், நிமல் சிரிபால டி சில்வா, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி கே.தவலிங்கம் ஆகியோர் அங்கம் பெற்றுள்ளனர்.
மீளாய்வுக்குழுவின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் அங்கத்தவர்களாக சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், நிமல் சிரிபால டி சில்வா, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி கே.தவலிங்கம் ஆகியோர் அங்கம் பெற்றுள்ளனர்.
Thanks - Vidivelli