அரும்பு சஞ்சிகையின் ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான ஹாபிஸ் இஸ்ஸதீனின் புதல்வரான இவர், Duchenne Muscular Dystrophy (DMD) எனும் அரியவகை நோயினால் தனது 4 வயதிலிருந்து பாதிக்கப்பட்டிருந்தார்.
இர்பான் ஹாபிஸ், தனது 18 வயதிலிருந்து எழுந்து நடமாட முடியாத நிலையில் கட்டிலிலேயே தனது வாழ்வைக் கழித்து வந்தார். மிகுந்த திறமையும் விடா முயற்சியும் கொண்ட இவர், இதுவரை Silent Thoughts, Moments of Merriment , Silent Struggle எனும் மூன்று நூல்களை ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளார். தனது நான்காவது நூலையும் எழுதிக் கொண்டிருந்த நிலையிலேயே இவர் எம்மைவிட்டும் பிரிந்துள்ளார்.
தனது சொந்த முயற்சியாலும் தந்தை மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பாலும் ஆங்கில மொழியைப் பயின்று கொண்ட இவர், குறித்த நோயினால் முழு உடலும் இயக்கமற்றிருந்த நிலையில் தனது ஒரு விரலை மாத்திரம் பயன்படுத்தி மடிக்கணினியிலும் கையடக்கத் தொலைபேசியிலும் தட்டச்சு செய்தே மேற்படி மூன்று நூல்களையும் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த மே மாத இறுதியில் Nas Daily எனும் சர்வதேச ஊடகம் இர்பான் ஹாபிஸ் தொடர்பில் வெளியிட்ட 1 நிமிட வீடியோ தொகுப்பின் மூலம் இவர் சர்வதேச அளவில் பிரபல்யம் பெற்றிருந்தார். இந்த வீடியோ வெளியிடப்பட்ட முதல் 4 நாட்களில் மாத்திரம் 1 கோடி தடவைகள் பார்வையிடப்பட்டிருந்தது. நேற்று அவர் மரணிக்கும் வரை குறித்த வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 75 இலட்சத்தை தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.