காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்மாகாண சபை தேர்தல் முறையினை  மாற்றுவதற்கு வாக்களித்தவர் அநியாயம்  நடந்து விட்டதாக  இப்போது  ஒப்பாரி வைக்கிறார்கள். காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு ‘திருட்டுப் போய்விட்டது’ என அலறுவது போல் இருக்கிறது இது. இனிவரும் காலங்களிலாவது இவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும. இவர்களைப் போன்றவர்கள் தொடர்பில் சமூகமும் முன்னெச்சரிக்கையாகவும் பொறுப்புடனும் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் பிரதித் தவிசாளர் பொறியியளாலர் அப்துர்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத்தேர்தலுக்கான புதிய தேர்தல் முறைதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். 

பொறியியளாலர் அப்துர்ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“ புதிய முறைமையில் மாகாண சபைத்தேர்தலை நடாத்துவதற்கான சட்டம் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அமைவாக நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டால் உடனடியாக புதிய தேர்தல் சட்டம் அமுலுக்கு வந்துவிடும். இவ்வறிக்கை மீதான விவாதம் இவ்வார இறுதியில் பாராளுமன்றத்தில் நடைபெறும் எனவும் அதன் பின்னர் வாக்கெடுப்பு நடாத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த எல்லை நிர்ணய அறிக்கை அங்கீகரிக்கப்பட்டு அதன்படி தேர்தல் நடாத்தப்பட்டால் சிதறிவாழும் சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் ஆபத்தாக அமையும் என்பது  உறுதியாக தெரிகின்றது.


 இந்த தேர்தல் முறையின் காரணமாக  ஏற்படப்போகும் அபாயம் குறித்து ஏற்கனவே தாராளமாக பேசியாகிவிட்டது. எல்லை நிர்ணய ஆணைக்குழவின் அறிக்கை வெளிவந்த பின்னரே இதன் பாரதூரத்தை எல்லோரும் புரியத்தொடங்கியுள்ளனர். இந்த  அறிக்கையில் இருக்கும் பாதகமான அம்சங்கள் நிவர்த்திக்கப்பட்ட பின்னரே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென முஸ்லிம் சமூகத்தின் சகல தரப்பினர்களிடமிருந்தும் அழுத்தமான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் வழமை போலவே காத்திரமான எந்த முயற்சிகளையும் பாராளுமன்ற அதிகாரம் கொண்ட முஸ்லிம் கட்சிகள்  செய்யாத நிலையிலேயே இப்போது இறுதிக்கட்டத்திற்கு இந்த விடயம் வந்திருக்கிறது.


 உண்மையில்  கடந்த ஆண்டில் மாகாண சபை தேர்தல் முறையை மாற்றுவதற்காக  அரசாங்கம்  அவசர அவசரமாக முயற்சித்த வேளையில்  அதனை தடுத்திருக்க வேண்டும். அல்லது ஓரிரு நாட்களாவது  அவகாசம் கோரி, அதனை ஆழமாக பரிசீலித்து  முறையான பாதுகாப்பு அம்சங்களை இத்திட்டத்தில் உள்வாங்கியிருக்க வேண்டும். அந்த இடத்திலும்  முஸ்லிம் சமூகத்தின்  அரசியல் அதிகாரம் வழமை போலவே  பிரயோசனப்படவில்லை. காலையில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் மாலையில் புதிய சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்திற்கான அத்தனை பிரதிநிதிகளும் அதற்கு ஆதரவளித்தனர். வழமை போலவே ஜனாதிபதியும் பிரதமரும்  எங்களுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார் என குழந்தைத்தனமாக விளக்கம் சொன்னார்கள். தேர்தல் ஒன்று வந்தால் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட சட்டம் செல்லுபடியாகுமா? அல்லது ஜனாதிபதியின், பிரதமரின்  அனுதாபம் செல்லுபடியாகுமா? என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையே அவர்களிடம் இருக்கிறது. 


பாராளுமன்றத்தில் பல நிபந்தனைகளை முன்வைத்து ஒற்றுமையாக நின்று போராடி பல திருத்தங்களை செய்த பின்புதான்  இதனை ஏற்றுக்கொண்டோம் என்று எல்லோரும் அப்போது அறிக்கை விட்டு சமூகத்தை ஆசுவாசப்படுத்தகின்றனர். ஆனால் ‘பாதுகாப்பு’ என கருதி எதனை உள்வாங்கினார்களோ அதுவும் கூட முஸ்லிம்களுக்கு பாதிப்பாக  அமைந்து விட்டது. இந்த தவறை நாம் அப்போதே சுட்டிக்காட்டியிருந்தோம். ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களில் 60 வீதமானவர்கள் தொகுதி முறையில் தெரிவாக வேண்டும் என இருந்த முன்மொழிவினை ,  50 வீதமென குறைத்து விட்டோம் என தெரிவித்தார்கள் . இத்தேர்தல் முறையினை ஆழமாக விளங்கிக்கொள்ளாத  அப்பாவித்தனமான கூற்றே இதுவாகும். ஏனெனில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போதுதான் சிதறி வாழும் முஸ்லிம் சனப்பரம்பலுக்கு அமைவாக  போதுமான தொகுதிகளை உருவாக்கிக் கொள்ள  முடியும். தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை குறையும் போது முஸ்லிம்களுக்கென கிடைக்கும் எண்ணிக்கையும் குறையும். இது முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை கடுமையாகப்பாதிக்கும்.


இதுவே இப்போது நடந்திருக்கிறது. 50வீதம் தொகுதி மூலம் தெரிவு என்பதற்கு பதிலாக அதனை அதிகரித்திருந்தால் இன்னும் அதிகமான முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளை உருவாக்கியிருக்க முடியுமென  எல்லை நிர்ணய உறுப்பினர்கள் இப்போது தெரிவித்துள்ளனர். ஆக, நாம் எதனை முன்வைக்கிறோமோ அது சமூகத்திற்கு பாதிப்பானதா ? பாதுகாப்பானதா? என்பதைக் கூட பொறுப்புடன் சிந்தித்து இவர்கள் செயலாற்றவில்லை. 

 ஜனாதிபதி பிரதமர்  என்கின்ற நமது எஜமானர்களின் தேவைக்கு அமைவாகவே  இவர்கள் நடந்து கொள்கின்றனர். முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமாகன  தேர்தல் முறை வர ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்  என கூறிய சில முஸ்லிம் அரசியல் வாதிகளை பேச்சினயே  இப்போது கேட்கவே முடிவதில்லை. ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்த இவர்கள் தொடர்ந்தும் மௌனம் காத்து தமது எஜமான விசுவாசத்தினை வழமைபோலவே இப்போதும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். 


இன்னொரு பக்கம்,  இந்த சட்டத்திற்கு வாக்களித்தவர்களே ' ஐயோ! அநியாயம் நடந்துவிட்டது, இதை செய்வதற்கு இவர்களுக்கு எப்படி மனசு வந்தது' என்ற இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்.முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாத்து வென்று தருகிறோம் எனக்கூறி,  மக்களின் ஆணையினையும் பெற்று அத்தனை வசதி வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்ட இவர்களே பொறுப்பற்ற வகையில் அம்மக்களுக்கு எதிராக சட்ட மூலத்திற்கு வாக்களித்து விட்டு இப்போது கவலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வீட்டை காவல் காப்பதற்கு நிறுத்தப்பட்டவர்களே அவ்வீட்டை  கள்வர்களுக்கு திறந்து கொடுத்துவிட்டு எல்லாம் முடிந்த பிறகு  ‘ஐயோ திருட்டுப்போய் விட்டது’ என கதறுகின்ற கதையாக இது இருக்கின்றது. 

 இதுபோன்ற விடயங்களில் அரசியல்வாதிகளை மாத்திரம் குற்றம் சொல்லவதோடு நிறுத்திக்கொள்ள முடியாது. ஏனெனில், இது போன்ற  பாரதூரமான தவறுகள் கடந்த காலங்களிலும் நடந்திருக்கின்றது.அவ்வாறு தவறு செய்தவர்களை கேள்விக்குட்படுத்தாது தொடர்ந்தும் அவர்களுக்கு ஆணையினை வழங்குவோரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.


எனவே பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள  இவ்வறிக்கை தொடர்பிலான வாக்கெடுப்பில் அதற்கு எதிராக அனைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளும் வாக்களிக்க வேண்டும். இனி வருங்காலங்களிலாவது , கடந்த கால அனுபவங்களை பாடமாக  கொண்டு பொறுப்புடன் கூடிய  அரசியல் தீர்மானங்களை நமது மக்கள் மேற்கொள்ள வேண்டும்.”
காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே  களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி  வைக்கிறார்கள் Reviewed by NEWS on August 26, 2018 Rating: 5