குளக்கரையில் அத்துமீறிக் குடியேறியுள்ள 8 பேருக்கு எதிராக வழக்கு


அம்பாறை, இறக்காமம் குளக்கரைக் காணிகளில், அத்துமீறிக் குடியேறியேறியுள்ள 8 குடியிருப்பாளர்களுக்கு எதிராக, அம்பாறை நீதவான் நீதிமன்றில், எதிர்வரும் 3ஆம் திகதி வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது என, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்தியத்தின் பொறியியலாளர் ரீ. மயூரன், இன்று (30) தெரிவித்தார்.
அத்துமீறிக் குடியேறியுள்ள குடியிருப்பாளர்கள் ஒவ்வொருவருவரும், 10ஆம் திகதிக்கு முன்னர், அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டும் என, தனித்தனியாக, எழுத்துமூலமான அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தும், அவர்கள் வெளியேறாதமையாலேயே, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று அவர் கூறினார்.
இதேவேளை, குளக்கரைக் காணிகளில் குடியேறியுள்ளோர் மேற்கொள்ளும் நிர்மாணப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதனால், தங்களது தோணிகளை நிறுத்தமுடியாமல், மீனவர்கள் அவதிப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
இறக்காமம் குளத்தை நம்பி, 1,500க்கும் மேற்பட்டோர், நன்னீர் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், நிர்மாணப் பணிகளுக்காக, கரையோரக் காணிகள் மண்போட்டு நிரப்பப்பட்டுள்ளமையால், குளத்தின் விசாலம் குறைந்து, நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது என்றும் கூறினார்.
குளக்கரையில் அத்துமீறிக் குடியேறியுள்ள 8 பேருக்கு எதிராக வழக்கு குளக்கரையில் அத்துமீறிக் குடியேறியுள்ள 8 பேருக்கு எதிராக வழக்கு Reviewed by NEWS on September 01, 2018 Rating: 5