தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Sep 10, 2018

இனவாதத்தை தூண்டி நாட்டை சீர்குலைக்க இடமளியோம் - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு


'ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களைச் செய்து இந்த அரசாங்கத்தை ஒரு போதும் வீழ்த்த முடியாது. அதேபோன்று சர்வதேச சக்திகளின் தேவைக்கு ஏற்ப இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி நாட்டை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்'' என  நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மஞ்சத்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக இலங்கையின் முதலாவது யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம். ஜலால்தீன் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 
‘‘நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுக்கின்றது. அதனைக் குழப்பி நாட்டில் இனவாதத்தை தூண்டி அரசாங்கத்தை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். 
ஜனாதிபதியின் அல்லது நாடாளுமன்றத்தின்   பதவிக் காலம் நிறைவடைய முன்பு இந்த அரசாங்கத்தை ஒருபோதும் யாராலும் மாற்ற முடியாது. 
ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களைச் செய்து இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. சிலர் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இது தொடர்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
30 வருட யுத்தத்தில் இந்த மண்ணில் நாங்கள் மிகவும் துவண்டு போய் தற்போது தான் சற்று மீண்டெழுவதற்கு ஆரம்பித்துள்ளோம். வெறும் யுத்தம் மாத்திரமே நிறைவடைந்துள்ளது. இன்னும் இனப்பிரச்சினைக்கு தீர்வு கூட காணப்படவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை அது  நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என நாங்கள் பல முனைப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம். எனினும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படக்கூடாது, நாட்டில் அமைதி நிலவக்கூடாது என்பதில் சில சர்வதேச சக்திகள் கவனமாக இருக்கின்றன. 
நாட்டில் இனவாதத்தை தூண்டி இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதன் ஊடாக இந்த மண்ணில் தமது கரங்களை பதிக்க சில வல்லரசுகள் முயற்சிக்கின்றன. 
இது தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட நாங்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. 
அரசியலுக்காக, அற்பசொற்ப வசதிகளுக்காக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தங்களது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக மிகக்கீழ்த்தரமாக சமூகத்தையும், நாட்டையும் காட்டிக் கொடுக்கின்ற எந்தவொரு சக்திக்கும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.'' – என்றார். 

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த போது அப்போதைய மத்திய அரசின் சுகாதார அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒத்துழைப்புடன் மஞ்சத்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலையை 2009ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலையாக பதிவு செய்தார். தொடர்ந்தும் இராஜாங்க அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இன்று இலங்கையின் முதலாவது யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக இது தரமுயர்த்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages