ஹென்றி மகேந்திரனுக்கு எதிராக களமிறங்கினார் நிசாம் காரியப்பர்!

கல்முனை நகரில் நிறுவப்பட்டிருந்த கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான கல்வெட்டை உடைத்து நொறுக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் டெலோ கட்சியின் முக்கியஸ்தருமான ஹென்றி மகேந்திரனுக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வழக்கு இன்று புதன்கிழமை (26) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சாட்சியங்களும் குறுக்கு விசாரணைகளும் இடம்பெற்றத்தைத் தொடர்ந்து நீதவான் மேற்படி தினத்திற்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அன்றைய தினத்தில் ஏனைய சாட்சிக்காரர்களை ஆஜர்படுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.

கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இருந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பாதைக்கு கல்முனை மாநகர சபையினால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2015.08.09ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் அப்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் இவ்வீதியை திறந்து வைப்பதற்காக மாநகர சபையினால் அப்பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.

அதேவேளை இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் பிரதமரின் வருகைக்கு முன்னதாக ஹென்றி மகேந்திரன் தலைமையில் பேரணியாக சம்பவ இடத்திற்கு வந்த சிலர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹென்றி மகேந்திரன் பெரும் சுத்தியல் ஒன்றினால் குறித்த கல்வெட்டை அடித்து நொறுக்கி விட்டு சென்றிருந்தார்.

அதன் பின்னர் அப்போதைய கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக்கினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, 75000 ரூபாவுடன் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் விசாரணை இடம்பெற்றது.

இதன்போது சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் கல்முனை மாநகர சபையின் முதல்வராக கடமையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்கள் சாட்சியமளித்ததுடன், ஹென்றி மகேந்திரன் சார்பில் ஆஜரான டெலோ கட்சியின் செயலாளர் நாயகமான சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா அவர்கள், நிஸாம் காரியப்பரை குறுக்கு விசாரணை செய்தார்.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக இக்குறுக்கு விசாரணை இடம்பெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் சாட்சிக் கூண்டில் நின்றவாறு குறுக்கு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த குறுக்கு விசாரணை முடிவுற்ற பின்னர், வழக்கை ஒத்திவைத்த நீதவான், அடுத்த விசாரணை அமர்வுக்கு குறித்த காலப்பகுதியில் ஆணையாளராக கடமையாற்றிய ஜே.லியாகத் அலி உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை விடுக்குமாறு அறிவித்தல் வழங்கினார்.

மிகவும் பரபரப்பான சூழலில் இடம்பெற்ற இன்றைய வழக்கு விசாரணையை பார்வையிட பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹென்றி மகேந்திரனுக்கு எதிராக களமிறங்கினார் நிசாம் காரியப்பர்! ஹென்றி மகேந்திரனுக்கு எதிராக களமிறங்கினார் நிசாம் காரியப்பர்! Reviewed by NEWS on September 26, 2018 Rating: 5