பெரும்பான்மை மக்களின் சட்ட விரோத குடியேற்ற பகுதிக்கு அன்வர் விஜயம்

.


எம்.ரீ. ஹைதர் அலி

திருமலை மாவட்டத்தின், புல்மோட்டை 13ஆம் கட்டை பகுதியில் சட்ட விரோதமான முறையில் மதகுரு ஒருவரினால் பதவி சிறி புர மற்றும் இலங்கையின் தென் பகுதி மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து குறித்த பிரதேசத்திற்கு வருகைதந்து காடுகளை அழித்து வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இப்பிரதேச முஸ்லிம்களுக்கு சொந்தமான சில காணிகளில் அத்துமீறி குடியேரி வருகின்றனர்.

இது விடயமாக 10.09.2018 காலை 10.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஜனாதிபதியின் செயலாளரை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு பேசியதுடன், இதுவிடயமாக அவசர தொலை நகல் ஒன்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

உடனடி நடவடிக்கையினை மேற்கொண்ட ஜனாதிபதியின் செயலாளர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு சட்ட விரோதமான முறையில் நடைபெறும் குடியேற்றங்களை நிறுத்தும்படி உத்தரவிட்டார். 

அதற்கமைவாக குச்சவெளி பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர், புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு உடன் விஜயம் மேற்கொண்டு சட்ட விரோத குடியேற்றங்கள் மற்றும் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு வரும் குடிசைகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.

இதனை அவதானித்த பிரதேச செயலாளர் உடனடியாக கிராம சேவையாளரூடாக அறிக்கை தயாரித்து உடன் வன பரிபாலன திணைக்களம், புல்மோட்டை பொலிஸ் நிலையம், அரசாங்க அதிபர் ஆகியோருக்கு சட்ட விரோத குடியேற்றங்களை அகற்றும்படி அடங்கிய கடிதத்தை அனுப்பி வைப்பதாக கூறினார்.

குறித்த நடவடிக்கையில் முழு மூச்சாக குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களுக்கு இம்மக்கள் நன்றியை தெரிவிப்பதோடு, கடந்த 27.08.2018 ஆகஸ்ட் அரிசிமலை அளவிட இருந்தபோது அரசாங்க அதிபரோடும் கலந்துரையாடி தடுத்து நிறுத்தி இம்மக்களுக்கு உதவி புரிந்தவரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களாகும்.

மேலும் எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் அரிசிமலை பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்காக அளவிட இருக்கும் நடவடிக்கை குறித்தும் பேசியுள்ளதாக, தொடர்ந்தும் இதுவிடயமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் இவ்விஜயத்தின்போது கருத்து தெரிவிக்கையில் குறித்த பகுதியில் சட்ட விரோதமாக காடழிப்பு மற்றும் வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. 

எமது மக்கள் எமது சொந்த இடங்களை துப்பரவு செய்து பயிர்கள் செய்ய முற்படும்போது சட்டத்தை மேற்கொள்ளும் வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் பெரும்பான்மை மக்கள் அரச மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளிலுள்ள காடுகளை அழிக்கும்போது சட்டத்தை செய்ய எப்படி தவருகின்றனர். 

மக்களிடம் யார் இங்கு வந்து குடியிருக்க அனுமதி வழங்கினார்கள் என்று பிரதேச செயலாளரால் வினவபட்டபோது தம்மை அந்த பகுதி பௌத்த குருவே தமக்கு வீடும் காணியும் தருவதாக கூறி அழைத்ததாக மக்கள் கூறினார்கள் இரவோடு இரவாக கட்டிட வேலைகளும் இடம்பெறுகின்றன. 

இது நல்லாட்சியில் கடந்த ஆட்சியால் விடப்பட்ட வேலைத்திட்டம் பெரும்பான்மை குடியேற்றம் இடம்பெறுகின்றது இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கை பொலிஸார் மற்றும் அதிகாரிகளின் கண்களுக்கு புலப்பட்டும் ஏன் நடவடிக்கை இல்லை என்பதும் வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...