கிழக்கு மாகாண காணி பிரச்சினை தீர்வுக்கு ACMC ஆவணங்களை திரட்டுகிறது!எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் தீர்த்து வைக்கப்படாத காணிப் பிரச்சினைகள் தொடர்பான ஆவணங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து திரட்டப்பட்டு வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் எஸ். சுபையிர்டீன், இன்று (24) தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில், நீண்டகாலமாக தீர்த்து வைக்கப்படாத காணிப் பிரச்சினை தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் காணியமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமைய விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இதுவரை தீர்த்து வைக்கப்படாத காணிகள் தொடர்பான விவரங்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தொகுதியமைப்பாளர்கள், மத்திய குழு தலைவர்கள் ஆகியோருக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

கடந்த யுத்த காலத்தின்போது, இடம்பெயர்ந்து காணிகளை இழந்த பொதுமக்கள் குடியிருப்புக் காணி, நெற்செய்கைக் காணி என்பவை தொடர்பான சரியான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும், அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினர் வனஜீவராசித் திணைக்களம், வன இலாகா திணைக்களம் என்பன இடம்பெயர்ந்த பொதுமக்களின் காணிகளை சில பிரதேசங்களில் இதுவரை மீள ஒப்படைக்கவில்லையெனவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாகவும், இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு வழங்கும் பொருட்டு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமையவே, இக்காணிகள் தொடர்பான விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...