அட்டாளைச்சேனையில் மலேரியா அபாயம்!

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மலேரியா நோய் அபாயம் காணப்படுவதால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கள உத்தியோகத்தர்களுக்கான மலேரியா தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.
 அவர் மேலும் தெரிவிக்கையில், 
 அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அட்டாளைச்சேனை- 15, 16 மற்றும் 07ஆம் பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பூச்சியியல் ஆய்வாளர்களால் மேற்கொண்ட பரிசோதனையின் போது 29 இடங்களில் மலேரியா நோயை ஏற்படுத்தக் கூடிய 'அ நுளம்பினம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 இதேவேளை அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு ஆகிய சுகாதார வைத்திய அதகாரி பிரிவுகளிலும் இவ்வகை கொடிய நுளம்பினம் கண்டறியப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமானதாகும்.
 யாழ்ப்பாணம் சென்று வரும் பஸ்களிலிருந்து இவ்வகை நுளம்பினங்கள் இப்பிரதேசங்களுக்கு வந்திருக்கலாம் என ஊகம் தெரிவிக்கப்படும் அதேவேளை மக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானத்துடனும், விழிப்புடனும் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் .
  நாட்டில் டெங்கு நோய் பாரிய சவாலாக இருந்து வரும் நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்ட மலேரியா நோய் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியது.
 எனவே பருவகால மழை தற்போது ஆரம்பித்துள்ளதால் நுளம்பின் பெருக்கம் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு வீட்டையும், வீட்டுச் சூழல் மற்றும் ஏனைய இடங்களையும் நுளம்பின் பெருக்கம் ஏற்படாதவாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அனைவரது கடமையுமாகும்  என்றும் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனையில் மலேரியா அபாயம்! அட்டாளைச்சேனையில் மலேரியா அபாயம்! Reviewed by Ceylon Muslim on October 25, 2018 Rating: 5