பிரதான செய்திகள்

கடல் திண்ணும் ஒலுவிலும் - திரைமறைவு அரசியலும்

ஒலுவில் மக்களினதும், மீனவர்களினதும்  பிரச்சினை என்றும் இல்லாத வகையில் தற்போது உக்கிரமடைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்திற்கும் அதனை அண்டிய மாவட்டங்களினதும் நலனை கருத்தில் கொண்டு தூர சிந்தனையோடு மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களினால் கொண்டு வரப்பட்டதே ஒலுவில் துறைமுக திட்டம். இந்த திட்டத்தின் பின்னணியில் நீண்ட நெடிய வரலாறு இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்கவின் காலத்தில் கிழக்கின் முக்கிய அரசியல் சக்தியாக மாறிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்திலும் பலமான கட்சியாக இருந்தது. அந்த பலத்தின் பிரதியீடாக தலைவர் அஸ்ரப் கிழக்கில் முஸ்லிம்களின் நன்மை கருதி பலவிடயங்களை கிழக்கிற்கு கொண்டுவந்தார். அவற்றில்  இரண்டு விடயங்கள் பிரதானமானது. ஒன்று ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றயது ஒலுவில் துறைமுகம்.இந்த இரண்டினதும் அமைவிடம் ஒலுவிலாக இருப்பதற்கு பூலோக ரீதியான பல காரணங்களை அஸ்ரப் அப்போதே இனம் கண்டிருந்தார்.அவற்றை விவரிப்பது இந்த கட்டுரையின் நோக்கமல்ல.  

ஆனால் இப்போது "ஏறச்சொன்னா எருதுக்கு கோபம் இறங்க சொன்னா முடவனுக்கு கோபம்" எனும் பழமொழியை ஞாபகப்படுத்துவதாக முக்கோண வடிவில்  விஸ்வரூபம் எடுத்துள்ளது இந்த பிரச்சினை. 
 துறைமுக நிர்மாண பணிகள் தடைப்பட்டுள்ள இந்த நிலையில் தொடர்ச்சியாக கடலினுள் இருக்கின்ற மண்ணை அகழ்ந்து எடுப்பதன் காரணமாக ஒலுவில் கடற்கரையானது கடலரிப்புக்கு உள்ளாகின்றது. இதன் மூலம் ஒலுவில் பிரதேசத்து மக்களின் வாழிடங்கள் கடலினால் காவு கொள்ளப்படுகின்றது. பண்பயிர்செய்கை பாதிப்படைந்துள்ளது,பல்லாயிரக்கணக்கான தென்னைமரங்கள் அழிந்து போயியுள்ளன  எனவே தொடர்ந்தும் மண் அகழ்வதற்கு அந்த மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். மண்ணரிப்பை தடுக்க கரையோரங்களில் கருங்கற்களினால் தடுப்பை  ஏற்படுத்துகின்ற போது அங்கு வாழுகின்ற  பராம்பரிய  கரைவலை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கரைவலை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மண் அகழ்வினை நிறுத்தினால் அட்டாளைச்சேனை தொடக்கம் கல்முனை வரைக்குமான ஆழ்கடல் மீனவர்களின் படகுகளை கரைக்கு கொண்டுவர முடியாது. இதானால் சுமார் இருபத்தி ஐயாயிரம் (25000) மீனவக்குடும்பங்கள் தமது ஜீவனோபாயத்தை இழந்துவிடும் ஆபத்து இருக்கின்றது. 

எனவே இந்த முக்கோண பிரச்சினையை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவுக்கு கொண்டுவர முடியாது.காரணம் ஒரே நேரத்தில் மூன்று தரப்புக்களையும் திருப்திப்படுத்திக்கின்ற தீர்வினை மேற்கொள்வது நடைமுறை சாத்தியமற்றது. எனவேதான் கிழக்கு மாகாணத்தின் அதிக செல்வாக்கை கொண்ட கட்சி என்கின்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் இப்போது இந்த விடயத்தை தீர்ப்பது தொடர்பில் நடைமுறை சாத்தியமான வழிகளை மேற்கொண்டு வருகின்றார். வெவ்வேறு கட்டங்களாக நகர்த்தப்படுகின்ற தீர்வுத்திட்ட ஆலோசனைக்கூட்டத்தின் ஒரு கட்டம் கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை  அமைச்சர் மஹிந்த சமரசிங்க,சம்பந்தப்பட்ட அரச உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. அங்கு பெற்றுக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய  ஒலுவிலுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செல்வதாக தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் இம்மாதம் (ஒக்டோபர்) 3 ஆம் திகதி அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் மகிந்த சமரசிங்க உட்பட அதிகாரிகள் குழுவினர் ஒலுவிலுக்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது சந்திப்பொன்று ஒலுவில் துறைமுகம் கேட்போர் கூடத்தில் அமைச்சர் குழுவினருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமிடையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில்  சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. கடலரிப்பை தடுத்து,கடலரிப்பினால் கடலுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் நிலங்களை மீட்பதற்கு மண்ணை அகழ்ந்து கடற்கரையை நிரப்புதல். அதற்கான இயந்திரத்தினை கொள்வனவு செய்வதற்கான நிதியில் 50 விகிதத்தினை வழங்க இலங்கை அரசு  முன்வந்துள்ள நிலையில் மிகுதி தொகையை வழங்க டெனிஸ் நாட்டு நிறுவனமான டெனிட்டா முன்வந்துள்ளது. இவ்வியந்திரமானது நான்கு மாதங்களுக்குள் கொள்வனவு செய்வதாக அமைச்சர்களினால் உறுதிமொழி வழங்கப்பட்டது. அத்தோடு துறைமுக அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ள அல்-ஜாயிஷா பாடசாலைக்கு சொந்தமான மைதானத்தை உடனடியாக விடுவிப்பதோடு,தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள அரபா நகர் வீட்டுத்திட்ட காணிகளை ரத்து செய்து பொதுத்தேவைகளுக்காக பயன் படுத்துமாறும் அமைச்சரினால் பணிக்கப்பட்டது. 

ஒரு துறைமுகமானது வெறுமனே மீன்பிடித்துறைமுகமாக மட்டுமே இருப்பதில் அந்த நாட்டுக்கு எவ்வித பயனுமில்லை,மாறாக பிறநாட்டு வர்த்தக கப்பல்கள் அந்த துறைமுகத்திற்கு வந்து போவதன்மூலமே இந்த பிரதேசம் சுபீட்சமடையும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க இங்கு பேசுகையில் குறிப்பிட்டார்.

உண்மையில்  மறைந்த  தலைவர் அஸ்ரப் அவர்களின்  தீர்க்கதரிசனம் அதுதான். ஒரு சமூகத்தின் வெற்றியும் கௌரவமான வாழ்க்கையும் கல்வியிலும், பொருளாதாரத்திலுமே தங்கியுள்ளது என்பதனை தலைவர் அஸ்ரப் புரிந்துவைத்திருந்தார்.அந்த வகையில் கல்விக்காக ஒலுவில் பல்கலைகழகத்தை நிறுவியது போலவே கிழக்கின் பொருளாதார கேந்திர நிலையமாக ஒலுவிலை உருவாக்கும் எண்ணத்தில் ஒலுவில் துறைமுகத்தை நிறுவுகின்ற திட்டத்தினை கொண்டுவந்தார். இந்த திட்டம் பூர்த்தி செய்யப்படுகின்ற பட்சத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பம் வாய்த்திருக்கும். இலங்கையின் வர்த்தகத்துறையின் முன்னேற்றத்தில் பெரும் மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். வெளிநாட்டு வர்த்தக கப்பல்களின் தற்காலிக ஓய்விடமாகவும்,எரிபொருள் நிரப்பும் மத்திய நிலையமாகவும் இது பாவிக்கப்பட்டிருக்கும். 

வெளிநாட்டின் வர்த்தக மற்றும் பண்டமாற்று வாணிபத்துறையில் மிக முக்கிய பங்கினை ஒலுவில் துறைமுகம் வகித்திருக்கும். பொத்துவில்,அறுகம்பே போன்றே இதனை அண்டிய பிரதேசங்களில சுற்றுலாத்துறையின் அபரிதமான வளர்ச்சியினை கண்டிருக்க முடியும். இப்படி பல அனுகூலங்களை கிழக்கிழங்கையும் அதன் பூர்வீக குடிகளான முஸ்லிம்களும் பெற்றிருப்பார்கள். இன்னும் ஓரிரண்டு தசாப்தங்களின் பின்னரான முஸ்லிம் சமூகத்தின் கல்விப்புலமும்,பொருளாதார கட்டமைப்பும் நிலையான ஸ்தீரத்தன்மையை கொண்டதாக அமைந்து விடும் என்பதே அந்த தலைவனின் கனவாக இருந்தது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் தலைவர் அஸ்ரபின் எதிர்பாராத மரணம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை புரட்டிப்போட்டது எனலாம். ஆம் ஒலுவில் துறைமுக வேலைகள் ஸ்தம்பிதம் அடைவதற்கு தலைவர் அஸ்ரப் அவர்களின் மரணமே காரணமாகிப்போனது. 2000 ஆம் ஆண்டு அஸ்ரபின் மரணத்தை தொடர்ந்து இன்றைய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமைப்பொறுப்பை ஏற்கிறார்.  தலைவர் அஸ்ரபுடன் இணக்கமான அரசியல் செய்துவந்த சந்திரிக்காவின் அரசு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரித்தாளுகின்ற தந்திரோபாயத்தினுள் வலிந்தே தள்ளிவிடுகின்றது. மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்கின்ற சந்திரிக்காவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கெதிரான பெரும் இனக்கலவரமொன்று மாவனெல்லயில் நடந்தேறுகின்றது. அதனை கட்டுப்படுத்த தவறியதன் காரணமாக சந்திரிக்காவின் அரசிலிருந்து தலைவர் ஹக்கீமும் அவர் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேறுகின்றனர்.  இதனால் பெரும்பான்மையை இழந்த அரசுக்கு முட்டுக்கொடுக்க ஜே.வி,பி  களத்தில் இறங்கினாலும் அது நீண்ட நாட்களுக்கு வெற்றியளிக்கவில்லை. எனவே மீண்டும் ஒரு பொதுத்தேர்தலுக்கு செல்கின்றது சந்திரிகாவின் அரசு.

2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்த தேர்தலில் ஐ.தே.க வெற்றிபெற்று ரணில் விக்ரமசிங்க பிரதமராகின்றார். இதன் போது தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு துறைமுகங்கள்,கப்பல் துறை அமைச்சு வழங்கப்படுகின்றது. ஜனாதிபதியாக சந்திரிக்காவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் ஆட்சிபீடத்தில் முரண்பாடுகளுடன் தொடர்கின்றது அரசாங்கம். பிரதமருக்கும்,ஜனாதிபதிக்கும் இடையிலான தொடர்ச்சியான முறுகல் நிலையினால் அமைச்சர் ஹக்கீமினால் ஒலுவில் துறைமுக பணிகளை நினைத்தவாறு துரிதமாக கொண்டு நாடாத்துவதற்கு முடியாமல் போகின்றது. பிரதமரின் ஒத்துழைப்பு கிடைக்கின்றபோதும் ஜனாதிபதியின் மூலம் தடைகள் விதிக்கப்படுகின்றன. இதற்கிடையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் ஸ்தீரத்தன்மைக்கு ஆப்பு வைக்கிறார் ஜனாதிபதி சந்திரிக்கா மீண்டும் ஒரு பாராளுமன்ற தேர்தலுக்கான முஸ்தீபுகள் இடம்பெறுகின்றன. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற அந்த தேர்தலில் சந்திரிகாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றிபெறுகின்றது. இதன்போது முன்னாள் அமைச்சர்  அதாவுல்லாஹ் தனிக்கட்சி அமைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்போடு ஐக்கிய மாகிவிடுகிறார். அந்த தேர்தலில் வெற்றிபெற்ற அதாவுல்லாஹ்வுக்கு  பலமான அமைச்சு வழங்கப்படுகின்றது. 

சந்திரிக்காவின் அரசியல் ரீதியான பழிவாங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடராக  உட்படுத்தப்படுகின்றது. தேர்தல் முடிந்து சில மாதங்களில் மங்கள சமரவீர,சந்திரிகா ஆகியோரின் கூட்டு சதியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்கள் இயக்கத்தைவிட்டு  பிரிந்து செல்கின்றார்கள். மகிந்த ராஜபக்ஷ பிரதமராக அமர்கிறார். ரிஷாத் பதியுதீன் குழுவினருக்கும் அமைச்சுக்கள் தாராளமாக வழங்கப்படுகின்றன. இதிலிருந்து ஒரு விடயத்தை மிகத்தெளிவாக நம்மால் உணர முடியும். 2000 ஆண்டிலிருந்து 2004 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தொடரான தேர்தல்கள்,ஸ்தீரமற்ற ஆட்சியின் போக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உள்ளக கட்டமைப்பை உடைத்து நிர்மூலமாக்க முனைகின்ற பெரும் தேசிய கட்சிகளின் சதி,  இவைகளுக்கு முகம் கொடுப்பத்தில் தலைவர் ஹக்கீம் எத்துணை அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருப்பார் என உணர முடிகின்றது.

இந்த இடத்தில் தலைவர்  ரவூப் ஹக்கீம் இல்லாமல் வேறு ஒருவரின் கைகளில் இந்த மக்கள் இயக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொடுக்கப்பட்டிருந்தால் இந்நேரம் கட்சியை குழிதோண்டி புதைத்து அதற்கான இறுதிக்கிரிகைகளை செய்திருப்பார்கள். நல்ல வேலை அது நடக்கவில்லை. 2004 களின் பின்னர் புதிதாக தோன்றிய சில்லறை கட்சிகள் முஸ்லிம்களின் பேரம்பேசும் சக்தியை அடகு வைத்துவிட்டு அமைச்சுப்பொறுப்புகளில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் காங்கிரசை துடைத்தெறிகின்ற அரசின் வேலைத்திட்டடங்களின் ஊது குழல்களாக மாறியிருந்தன. இது தலைவர் ஹக்கீமுக்கு ஒரு சவாலான காலமாகவே அமைந்தது இடைக்கிடைக்கிடையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சில இணக்கப்பாடுகளுக்கு வந்தாலும் தொடர்ந்தும் எதிர்க்கட்சி அரசியலையே ரவூப் ஹக்கீம் முன்னெடுத்துவந்தார். இதே கால எல்லையில் அதாவுல்லாஹ் மற்றும் ரிஷாத் பதியுதீன் போன்றோருக்கு பலமான அமைச்சுக்கள் வழங்கப்பட்டன.

2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தோல்வியடையும் வரைக்கும் அதாவுல்லாஹ் கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சராகவும், உள்ளூராட்சிகள் மாகாண சபைகள் அமைச்சராகவும் இருந்ததோடு, முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் காணப்பட்டார். இவ்வாறே அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் மகிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் நெருக்கத்தினை பேணிவந்தார். ஆனால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கட்சியை பாதுகாப்பதிலும்,முஸ்லிம்களின் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்படுகின்ற போதுகளில் அவற்றுக்கெதிராக உரத்துக்குரல் கொடுப்பதிலும் முன்னணியில் நின்று செயற்பட்டார்.  

தொடர்ச்சியாக எதிர்க்கட்சியில் இருந்து வந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு  2010 ஆம் ஆண்டின் பின்னர் நீதியமைச்சு வழங்கப்பட்டது. எந்த அபிவிருத்தியையும் செய்ய முடியாத கையறுநிலையே அந்த அமைச்சின் பிரதிபலன். 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு நிலையான அரசியல் ரீதியான அதிகாரம் ஆட்சி செய்த அரசுகளினால் வழங்கப்படவில்லை என்பதனை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரம் பிரிந்து சென்றவர்கள் பிரபலமான அமைச்சுக்களில் இருந்து கொண்டு கோலோச்சியவர்கள் என்பதனையும் மறந்துவிடலாகாது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாகியதன் பின்னர் இப்போதுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தியை நுகர்ந்து பார்க்கின்ற ஒரு சந்தர்ப்பம் கிட்டியிருப்பதோடு மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் பூர்த்தி செய்யப்படாத அபிவிருத்தி திட்டமான ஒலுவில் துறைமுக உருவாக்கத்தினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் அமைச்சர் ஹக்கீமுக்கு கிடைத்துள்ளது. அதற்கு ஏதுவான களநிலவரத்தினை துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இணைந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னெடுத்து வருகின்ற இந்த வேளையில், இத்திட்டத்தினை முன்னெடுத்து பூர்த்தியாக்கினால் கிழக்கில் மாத்திரமல்ல முழுஇலங்கைக்குள்ளும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அழியாத நிரந்தரமான இடம் கிடைத்து விடும் என்பதனால் அரசியலில் முகவரியிழந்து போயிருக்கும் சில அற்பர்கள்  அரசியல் உள்நோக்கில் பொதுமக்களை சிலர் குழப்பி விடுகின்ற ஆரோக்கியமற்ற  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஒலுவில் துறைமுகம் மறைந்த தலைவரின் கனவு மட்டுல்ல முஸ்லிம்களின் பொருளாதாரத்திற்கான ஆதாரமாவும் அது அமைந்துவிடும். தாம் அதிகாரத்தில் இருந்த காலமெல்லாம் இந்த மக்களை ஏமாற்றி அவர்களுக்கான நியாயமான பாத்திரத்தை பெற்றுக்கொடுக்க முனையாதவர்கள் இப்போது அமைச்சர் ஹக்கீமின் காத்திரமான  முன்னெடுப்புகளுக்கு  சில்லறைத்தனமான அரசியல் காய்நகர்த்தலை செய்து அதனை குழப்பியடித்து தடுக்க  முற்படுவது கண்டிக்கத்தக்கதோடு, இது வேதனைக்குரிய விடயமாகும். இந்த விடயத்தில் பிரதேசவாதத்தை மூலதனமாக்கி அரசியல் செய்ய சிலர்  முனைவதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் ஹக்கீமுக்கு ஏசுகின்ற வகையில்  சொல்லிக்கொடுத்து சொல்லவைக்கின்ற படுகேவலமான விடயங்களை அவதானிக்க முடிகின்றது. இப்படித்தான் கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போதும் சந்திக்கு சந்தி படம் காட்டப்பட்டது. அமைச்சர் ஹக்கீமை பலி வாங்குகிறோம் என்ற நினைப்பில் முழு சமூகத்தின் மானத்தையும் ஏலம் விடுகின்ற சதிவேலையில் இந்த  அரசியல் அனாதைகள் ஈடுபட்டு வருகின்றனர்.  
 பிரதேசத்தில் முகவரியிழந்து போய் இருக்கின்ற ஒரு சில உள்ளூர் அரசியல் வாதிகள்  அப்பாவி பொதுமக்களை  தூண்டிவிடுகின்ற விடயத்தையும் அவதானிக்க முடிகிறது. ஒரு அபிவிருத்தி திட்டம் வருகின்ற போது அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கின்ற நிலையான தீர்வினை சிந்திக்க வேண்டுமே தவிர அந்த திட்டத்தினை முடக்கி இல்லாமல் செய்வதற்கான முஸ்தீபுகளில் இறங்குவது அபத்தமான செயலாகும். தலைவர் அஸ்ரபின் தீர்க்கதரிசனத்தை நடைமுறைப்படுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கரத்தை பலப்படுத்துவதே இன்றைய தேவையாகும். 

- நாச்சியாதீவு பர்வீன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget